பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/453

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி / ஹை பவர் கமிட்டி * 1075

குழுத் தலைவர் முன்மொழிந்த தீர்மானம் இதுதான் :

“அருகி வரும் பகடர்' இனத்தை வளர்த்து அவர்களுடைய மொழியையும், கலாசாரத்தையும் கட்டிக்காக்க வேண்டிய பெரும் பொறுப்பு நம் தலைகளில் சுமத்தப்பட்டிருக்கிறது.

ஜாதிக்காய் மலைத் தொடரில் சிவநந்தி நதி உற்பத்தியாகுமிடத்தை ஒட்டி இப்போது எஞ்சியிருக்கும் “பகடர் குடும்பங்களின் எண்ணிக்கை மொத்தம் பத்துதான். இந்தப் பத்துக் குடும்பங்களினுடைய அபிவிருத்திக்காக நமது அரசாங்கம் திட்ட ஒதுக்கீட்டில் 2 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறது. அந்த 2 கோடி ரூபாயை எப்படிப் பயனுள்ள விதத்தில் செலவழித்துப் பகடர் மக்களை முன்னேற்றலாம் என்று தீர்மானிக்கும் பொறுப்பு நம்மிடம் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடலாகாது என்று தொடக்கத்திலேயே நினைவூட்டினேன். மீண்டும் அதையே வற்புறுத்திச் சொல்ல விரும்புகிறேன்.

இந்தப் பகடர் மொழி, இனம் பற்றிய நூல்கள் சில லண்டனிலுள்ள இந்தியா ஹவுஸ் லைப்ரரியிலும், அரும்பொருள்கள் சில பிரிட்டீஷ் மியூஸியத்திலும் உள்ளதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. குழுவின் தலைவர் என்ற முறையில் நான் மட்டுமே லண்டனுக்குப் போய் இந்த விவரங்களை அறிந்து வந்தால் போதும் என்றாலும் என் சுயநலத்துக்காக மட்டும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு மற்றவர்களை ஒதுக்கிவிட நான் விரும்பவில்லை. குழுவின் அடுத்த கூட்டத்தையே லண்டனில் கூட்டலாம் என்று முன்மொழிகிறேன்.”

தலைவர் கூறிய இந்த முன்மொழிதலை மற்ற இருபத்தொன்பது பேரும் அப்படியே கோரஸ் பாடுவது போன்ற குரலில் வழி மொழிந்தனர். ஒரு சின்ன ஆட்சேபணை கூடக் கிளம்பவில்லை. .

கூட்டத்து நிகழ்ச்சிகளை மினிட்ஸ்ஸுக்காகக் குறிப்பெடுத்த கிளார்க் “60 மைல் தூரத்தில் இருக்கிற ஜாதிக்காய் மலையில் போய்ப் பகடர்களை நேரில் பார்த்துவிட்டு வரத் துப்பில்லை! 6000 மைல் கடந்து போய் லண்டனிலுள்ள மியூஸியத்தைப் பார்க்கப் போகிறார்களாம். இந்தக் கமிட்டி உருப்பட்டாற் போலத்தான்” என்று தனக்குள் வெறுப்புடன் முணுமுணுத்துக் கொண்டான்.

அடுத்த வாரமே பகடர் நல்வாழ்வுக்கான 'ஹைபவர் கமிட்டி' லண்டன் போவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கிற்று.

பயணத்துக்கு சுமார் முப்பது லட்ச ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டது. பரம இரகசியமாக ஏற்பாடுகள் வைக்கப் பட்டிருந்தாலும் எப்படியோ தகவல்கள் வெளியேறிவிட்டன.

பயமேயில்லாத ஓர் இடதுசாரி தினசரி “பகடர்கள் புண்ணியத்தில் பாமரர்கள் உல்லாசப் பயணம்” என்று தலைப்பிட்டு இதைக் கண்டித்தது. மிக மிக ஏழ்மையிலும் பின் தங்கிய நிலையிலும் இருக்கும் பகடர்களை முன்னேற்றுவதற்காக முதல்