பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/454

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1076 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருக்கும் இரண்டு கோடி ரூபாயில் ஒரு பைசாக்கூட பகடர்களுக்குப் போய்ச் சேர முடியும் என்று தோன்றவில்லை . என்பதையும் அந்தப் பத்திரிகை கடுமையாகச் சுட்டிக் காட்டியிருந்தது.

ஆனால், அந்தப் பத்திரிகையை யாரும் பொருட்படுத்தவில்லை. கமிட்டியின் முடிவுப்படி லண்டன் பயணம் உறுதி செய்யப்பட்டது. முப்பது உறுப்பினர்களும் இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் லண்டன் புறப்பட்டனர்.

லண்டனில் பத்து நாட்கள் தங்கி ஒரு முதல்தரக் கமிட்டிக்குரிய வசதிகளை அனுபவித்தார்கள் உறுப்பினர்கள். அவர்கள் தங்கியிருந்த லண்டன் நகர ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றிலேயே குழுவின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

குழுவின் உறுப்பினர்களின் அதிபுத்திசாலியான ஒருவர் அப்போது அபூர்வமான சமயோசித யோசனை ஒன்றைத் தெரிவித்தார்.

“லிங்விஸ்டிக் சர்வே ஆஃப் இண்டியா என்னும் நூலில் கிரியர்ஸன் பகடர் மொழியைப் பற்றி எதுவுமே குறிப்பிடாதது மிகவும் வருந்தத்தக்கது. அதிர்ஷ்டவசமாக இன்று பிரிட்டிஷ் லைப்ரரியில் புதையல் கிடைத்ததுபோல் ஒரு நூலைப் பார்க்க நேர்ந்தது. பென்ஸில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் ஏழாண்டுகளுக்கு முன் பகடர் இனத்தினரை நேரில் சந்தித்து அவர்களோடு தங்கி வாழ்ந்து ஆராய்ந்து 'லாங்வேஜ் - கஸ்டம்ஸ் அண்ட் பிலீவ்ஸ் ஆஃப் பகடாஸ்’ என்ற அருமையான புத்தகத்தை எழுதியிருக்கிறார். பகடர்களிடம் பதிவு செய்த டேப்புக்களும் பகடர் பற்றிய செய்திகள் அடங்கிய பல இரகசியக் கோப்பு (ஃபைல்)களும் அவரிடம் இருப்பது நூலின் முன்னுரையிலிருந்து தெரிகிறது.இந்தக் குழு சிரமத்தைப் பாராமல் இப்படியே அமெரிக்கா சென்று பென்ஸில் வேனியாவிலுள்ள அந்த ஆராய்ச்சிப் பேராசிரியரை உடனே சந்தித்தாக வேண்டியது மிக மிக அவசியம்”

"மார்வலெஸ் ஐடியா! இதைக் கண்டிப்பாகச் செய்தாக வேண்டும்.” என்று குழு ஒரு சிறு முணுமுணுப்பும் இல்லாமல் உடனே முடிவு செய்தது. ஹைகமிஷன் மூலம் பயணத் திட்ட மாறுதல், அதிகப்படித் தொகை சாங்ஷன், பாஸ்போர்ட் விஸ்தரிப்பு, விஸா ஏற்பாடுகளை லண்டனில் இருந்தபடியே செய்து முடித்தார்கள் அவர்கள்.

மேலும் எழுபது லட்ச ரூபாய் செலவில் ஏழை எளியவர்களாகிய பகடர்களை முன்னேற்றும் புனிதயாத்திரை அமெரிக்காவுக்கும் தொடர்ந்தது."பென்ஸில்வேனியா - சென்றபின் அங்கே அவர்களுக்கு ஏமாற்றமளிக்கும் செய்தி காத்திருந்தது. பகடர்களைப் பற்றி அவர்களோடு தங்கி வாழ்ந்து ஆராய்ந்திருக்கும் அந்தப் பேராசிரியர் அப்போது பென்ஸில்வேனியாவில் இல்லை என்றும் அவர் ஹவாயில் உள்ள ஈஸ்ட்வெஸ்ட் சென்டர்-பல்கலைக்கழகத்தில் இருப்பதாகவும் தெரியவந்தது.

அட்லாண்டிக் ருட்டில் புறப்பட்டுத் திரும்புவதற்கும் அதே டிக்கெட் வாங்கியிருந்த குழுவினர் பஸிபிக் ரூட்டில் திரும்ப் முடிவு செய்து டிக்கெட்டை