பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1082 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

அவர் எழுதிப் புத்தகமாக வெளிவந்திருந்த புதிய நாவலின் பிரதி ஒன்றைத் கையோடு விலைக்கு வாங்கிக் கொண்டு வந்திருந்தாள்.

"இதில் உங்கள் கையெழுத்து ஒன்று வேண்டும்."

"எல்லாப் புத்தகங்களும் வாங்கி வைத்திருக்கிறீர்களா?”

“உங்கள் புத்தகங்கள் எல்லாவற்றையும் கையெழுத்தோடு சேர்த்து வருகிறேன் இதற்கு முன் உங்களிடம் அறிமுகம் இல்லாமலே பல பொது இடங்களிலும், கூட்டங்களிலும் உங்களிடம் கையெழுத்தை வாங்கியிருக்கிறேன். அறிமுகமான பின் இப்போதுதான் உங்களிடம் நேரில் கையெழுத்து வாங்குகிறேன்.

“வேறு யார் யாருடைய புத்தகங்கள் உங்களுக்குப் பிடிக்கும்?”

"மற்றவர்களுடைய எழுத்துக்களைக் கிடைத்தால் படிப்பேன். படிப்பதோடு விலைக்கு வாங்கி அலமாரியில் சேர்ப்பது உங்கள் எழுத்துக்களை மட்டுந்தான்.”

இவள் அப்படிக் கூறியது மிகவும் பிடித்திருந்தது. இப்படி ஒரு பதிலைத்தான் அவர் அவளிடமிருந்து எதிர்பார்த்தார். ஆனாலும் நேர்மாறான சொற்களை அப்போது அவருடைய வாய் பேசியது.

"ஒரு விசிறி கண்மூடித்தனமாகவீர வணக்கம் புரியலாம். ரசிகைக்கு அது கூடாது. ரசனைக்குரிய எல்லாவற்றையும் சமதிருஷ்டியோடு பார்க்க வேண்டும்.”

"நான் ரசிகையாக இருக்க விரும்பவில்லை. உங்களுடைய கண்மூடித்தனமான வசிறியாகவே இருக்க விரும்புகிறேன்.”

புழுக்கத்தைத் தணித்து இதம் அளிக்கும் தென்றலாக இந்தப் பதில் அவரைக் குளிர்வித்தது.

விமர்சகர்களின் தாக்குதல், எதிரிகளின் புகைச்சல், எழுத்தினால் தொட முடியும் உயரத்தை வாழ்க்கைக் கவலைகளால் இழக்கும் வேதனை. எல்லாவற்றிலிருந்தும் தம்மை மீட்டு ஆசுவாசப்படுத்தும் காற்றை அந்த 'விசிறி' தனக்கு மட்டுமே அளிக்கத் தயாராயிருந்தது என்ற எண்ணமே அப்போது அவர் கர்வப்பட்டுக் கொள்ளக் காரணமாயிருந்தது.

வெளி உலகத்துக்கு ஜனநாயகம், பெருந்தன்மை, சமத்துவம் பொது நோக்கு விருப்பு வெறுப்பின்மை எல்லாவற்றையும் தாராளமாக எழுதுகிற, பேசுகிற பிரமுகன் அத்தனை பேருக்கும் அந்தரங்கமாக இப்படி ஒரு கண்மூடித்தனமான விசிறிதான் தேவை இப்படி விசிறிகளுக்குத்தான் அவர்கள் உள்ளூரத் தவிக்கிறார்கள். இந்த விசிறிகள் தங்களை மட்டுமே குருட்டுத்தனமாக வழிபடவேண்டும் என்ற சர்வாதிகார ஆசைதான் அவர்களைக் கீறிப் பார்த்தவர் உள்ளே தெரியும். ஆனால் வெளியே பேசும்போது "வீர வணக்கம். தனிநபர் வழிபாடு, தனிநபர் ஆதிக்கம் எல்லாம் ஒழிக்கப்பட வேண்டும்” என்று நாகரிகமாகப் பாசாங்கு செய்ய ஒவ்வொருவரும்