பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/461

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இரண்டாம் தொகுதி / விசிறி * 1083

கற்றிருக்கிறார்கள். அவரும் அதைக் கற்றிருந்தார். தங்களை மட்டுமே புகழ்கிறவர்கள் மேல் புகழப்படுகிறவர்களுக்கு ஒர் இனிய அக்கறையே ஏற்பட்டு விடுகிறது.

மூன்றாவது முறை அவள் அவரைச் சந்தித்தது அவருடைய அலுவலகத்தில் அவர் ஆசிரியராக இருந்த பத்திரிகைக் காரியாலயத்தில் அவருடைய ஏ.சி. அறையில் அச் சந்திப்பு நடந்தது.

அன்று அவள் வேண்டும் என்றே சாரமில்லாத கேள்விகளாகக் கேட்பதாக அவருக்குத் தோன்றியது.

“கதை கட்டுரைகளுக்குப் பத்திரிகைகளில் எந்த விகிதாசாரத்தில் சன்மானம் கொடுக்கிறீர்கள்?”

“ஒவ்வொரு பத்திரிகை ஒவ்வொரு மாதிரி கொடுக்கிறது. ஒரு காலத்தில் எங்கள் பத்திரிகையில் ஒவ்வோர் இதழிலும் வெளியாகிற சிறந்த கதைக்கு ஒரு பவுன் கொடுத்து வந்தோம். இப்போது பவுன் விலை ஏறிவிட்டது. வருஷத்துக்கு ஒருமுறை மட்டும் மிகச் சிறந்த கதைக்கு ஒரு பவுன் கொடுக்கிறோம்.”

“பத்திரிகைகளில் போட்டிகள் வைக்கிறார்களே? போட்டிகளின் மூலம் நல்ல கதைகளோ நல்ல எழுத்தாளர்களோ கிடைப்பதுண்டா?” .

“உண்டு என்றும் சொல்வேன், இல்லை என்றும் சொல்வேன். சாதாரணமாக நமக்குத் தபாலில் கிடைக்கும் பிரமாதமான கதைகளும் இருக்கும். பிரமாதமாக அறிவிக்கப்பட்டுச் சாதாரணமான தேர்வைப் பெறும் போட்டிகளும் இருக்கும். போட்டியா? போட்டியில்லையா என்பது அல்ல முக்கியம். எழுதுகிறவனுக்கு எழுத்து என்பது பசியாகவும் தாகமாகவும் அடக்கமுடியாத உணர்வாகவும் இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் தேறாது.”

பேச்சு இப்படியே தொடர்ந்தது.

அந்த வாரம் வெளியாகியிருந்த அவரது புதிய சிறுகதையைப் பற்றி அவள் ஏதாவது பிரஸ்தாபித்துப் புகழ்வாள் என்று எதிர்பார்த்தார் அவர், அவள் அதைப் பார்த்தாகவோ, படித்ததாகவோ காண்பித்துக்கொள்ளவில்லை. வேறு லெளகீகங்களையே மேலும் விசாரித்துக் கொண்டிருந்தாள்.

அநாவசியமாக அவள் தம்மை எதிர்பார்க்கவும், ஏங்கவும், காக்கவும் வைக்கிறாள் என்று அவருக்குத் தோன்றியது.

"புகழை எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கும் பழுத்த ஞானிகூட அந்த விநாடிகளில் சாதாரணச் சிறுபிள்ளையாகி விடுகிறான். புகழை எதிர்பார்த்து ஏங்காத சிறுபிள்ளைகூட அந்தக் கணத்திலேயே அந்த விநாடியிலேயே பழுத்த ஞானி ஆகிவிடுகிறான் என்கிற தத்துவம் அவருக்கு ஞாபகம் இருந்துங்கூட அவளுடைய அழகில் இளமை பொங்கும் அந்த விசிறி அவரைக் கோமாளி போலப் பித்துப் பிடித்துப் போகச் செய்திருந்தாள். அவள் விசாரணையிலிருந்து மீண்டும் தம்மைப் புகழ இருக்கும் நிமிஷங்களுக்காகக் காத்திருந்தபடியே அந்தச் சாரமற்ற