பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/462

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1084 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

விசாரணைகளைப் பொறுத்துக் கொண்டிருந்தார் அவர். அவளோ அவருடைய ஏக்கத்தைப் பற்றிக் கவலைப்படாமலே சாரமற்ற கேள்வியைக் கேட்டாள்.

“உங்களுக்கு ஃபுல்ஸ்கேப் பேப்பரில் எழுதப் பிடிக்குமா? அதையே இரண்டாக மடித்து எழுதப் பிடிக்குமா?"

"பேப்பர் முக்கியம் இல்லை. எழுத வேண்டும் என்கிற உணர்வுதான் முக்கியம் அந்த உணர்வு வரும்போது, முழுத்தாள், அரைத்தாள், ஒன்ஸைட் பேப்பர், எது கிடைத்தாலும் எழுதிவிடுவேன்.”

"மூட் வந்தால்தான் எழுதுவீர்களா?”

“செய்ய இயலாமையை நியாயப்படுத்தவும், செய்யத் தவறியவற்றுக்குக் காரணம் கற்பிக்கவும் சினிமாக்காரர்கள் கற்பித்த வார்த்தை அது.”

“எங்க காலேஜ் ட்டுடன்ஸ் யூனியனில் கவிதைப் போட்டி என்று வைத்திருக்கிறார்கள். ஒரு வாரமாக எழுத முயற்சி செய்கிறேன், முடியவில்லை.”

அவருக்குச் சுரீரென்று தன்னுடைய இயலாமையைச் சொல்வதற்குமுன் அவள் தம்முடைய மனநிலை பற்றி விசாரித்திருக்கிறாள் என்பதையே அவரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் இருந்தது. அந்த சமப்படுத்தல் அவருக்குக் கொஞ்சம் எரிச்சல் ஊட்டியது. ஆனால் 'விசிறி' என்பதற்காகப் பொறுத்துக் கொண்டார். ஆசை வெட்கமறியாது என்பார்களே? அப்படி வெட்கத்தை விட்டுவிட்டு அவரே அவளைக் கேட்டார்.

“என்னுடைய சமீபத்தியக் கதையை நீங்கள் இன்னும் படிக்கவில்லை போல் இருக்கிறதே!”

“இல்லை; ஒரு வாரமாக வேலை அதிகம். கொஞ்சம் நேரம் கிடைச்சதும் படித்து விடுவேன்.”

இந்தப் பதிலும் அவருக்கு அவ்வளவாகத் திருப்தியளிக்கவில்லை. எழுத்துக் களைப் படிப்பதைவிட அவளுக்கு வேறு ஒரு வேலை இருக்க முடியும் என்பதையே அவரால் ஏற்க முடியவில்லை.

முதல் இரண்டு சந்திப்புகளில் அவள் காட்டிய குருட்டுப் பக்தியும் அந்நியோன்யமும் அவரை அப்படி ஆக்கி வைத்திருந்தன. புகழ்கிறவரின் அடிமைத்தனத்தைவிட அபாயகரமானது புகழப்படுகிறவரின் அடிமைத்தனம். புகழப்படுகிறவனே புகழ்கிறவரிடம் அடிமைப்படுவது பரிதாபகரமானது. அவர் அப்போது இப்படிப் பரிதாபகரமான நிலையில் இருந்தார்.

இரண்டு நாட்கள் கழித்து அவள் அவரை நான்காவது முறையாகச் சந்திக்க வந்தாள். அப்போது வெளியில் மழை பெய்து கொண்டிருந்தது.

கையில் ஒரு கற்றைக் காகிதங்களுடனும் பைண்டு செய்த நோட்டுப் புத்தகங்களுடனும் வந்திருந்தாள்.