பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/464

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

149. ஞானச் செருக்கு

மூக சீர்திருத்தவாதியும் பிரமுகருமான சுகவனம் அந்த விஷயத்தில் மிகவும் குரூரமான கொள்கைப் பிடிவாதம் உள்ளவராக இருந்தார். வயது முதிர்ந்தும் பிடிவாதத்தைத் தளர விடவில்லை அவர்.

எவ்வளவு வேண்டியவர்கள் வீட்டுத் திருமணமாயிருந்தாலும், வரதட்சிணை, சீர்செனத்தி என்று பெண்ணைப் பெற்றவர்களைக் கசக்கிப் பிழியும் கல்யாணங்களுக்கு அவர் போவதில்லை. அப்படி ஒரு விரதம் வைத்திருந்தார். சம்பந்தப்பட்டவர்களே நேரில் வந்து பத்திரிகை கொடுத்து அழைத்தாலும், அத்தகைய திருமணங்களை மதித்துப் போகாமல் புறக்கணித்தார். பெண்ணுரிமை இயக்கத்துக்காக கடந்த முப்பது ஆண்டுகளாக அலுக்காமல், சலிக்காமல் போராடிவந்தார் அவர். இந்தப் போராட்டம் அவரை வெகு ஜன விரோதியாக்கி இருந்தது.

“பத்தாயிரம், இருபதாயிரம் என்று விலை கொடுத்து வரதட்சிணைக்கு மாப்பிள்ளை தேடுவது என்பது சந்தையில் காளை மாடு பிடிப்பது போல அநாகரிகமாக நடந்து வருகிறது. இது சாஸ்திரங்களின் படியும் சரி அல்ல. மனிதாபிமானப்படியும் சரியல்ல. பெண்ணடிமைத்தனத்தின் அடையாளங்களில் முதன்மையானது வரதட்சிணை” என்று அவர் முழங்கிய மகாநாடுகளும், கூட்டங்களும் கணக்கில் அடங்காதவை. வரதட்சிணை வாங்கிய ஒரு கல்யாணத்தில் மறியல் செய்து ஜெயிலுக்குக் கூடப் போய் விட்டு வந்தார்.

இப்படி அவரும், அவரைப் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளும் எவ்வளவோ கரடியாகக் கத்தியும் நாடு திருந்தி விடவில்லை. பழக்கங்கள் மாறி விடவில்லை. அதுதான் அவரைக் கூடச் சற்றே விரக்தியடைய வைத்தது.

“தன் பெண்ணுக்கு வரதட்சிணை கொடுத்து, ரிஸ்ட் வாட்சிலிருந்து பாத்திரம் பண்டம் வரை சகலமும் வாங்கிக் கொடுத்துச் சிரமப்பட்ட ஒரு தாயோ, தந்தையோ அதை மனத்தில் வைத்துக் கொண்டு தன் பிள்ளைக்கு மணமகளாக வருகிற பெண்ணிடம் கருணையாக நடந்து கொள்வதில்லை. அந்தப் பெண்ணையும், அவளுடைய பெற்றோரையும் கசக்கிப் பிழியவே தயாராயிருக்கிறார்கள். இதை எல்லாம் தவிர்க்க ஒரே வழி படித்த பெண்ணே துணிந்து முன் வந்து ‘வரதட்சிணை வாங்கிக் கொள்ளும் எந்த மணமகனையும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்’ என்று மறுப்பதுதான். இப்படி மறுக்கத் துணியாமல் பெண் ஆணுக்குப் பணிந்து பயந்து போகிறவரை சமூகத்தில் எந்த மாறுதலும் ஏற்படப் போவதில்லை. நாம் எதிர்பார்க்கிற பெண்ணுரிமையும் கிடைக்கப்போவதில்லை” என்று அவர் கூறிய