பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/465

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி / ஞானச் செருக்கு 1087

யோசனையை யாரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. உலகம் எப்போதும் போல்தான் நடந்து கொண்டிருந்தது.

“சுகவனத்துக்கென்ன? பிள்ளையா? குட்டியா? ஒன்றும் இல்லை. அவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம்” என்று அவருக்குக் குழந்தை குட்டிகள் இல்லாததால் தான் அவர் இப்படி எல்லாம் மேடைகளில் முழங்குவதாகச் சிலர் பேசிக் கொண்டார்கள். யார் என்ன பேசினாலும், எப்படிக் கிண்டல் செய்தாலும் பெண்ணுரிமை இயக்கத்திலும், வரதட்சினை ஒழிப்பு இயக்கத்திலும் அவருடைய தீவிரம் குறையவே இல்லை. வயது முதிர்ந்த பின்னும் அவரைப் பொறுத்தவரை இளமையின் வேகத்துடன்யே செயற்பட்டுக் கொண்டிருந்தார் அவர். அவ்வப்போது சிறு சலிப்பு ஏற்படுவது மட்டும் தவிர்க்க முடியாததாயிருந்தது.

ஒரு சமயம் பக்கத்து வீட்டில் குடியிருந்த சிவன் கோயில் குருக்களின் கடைசிப் பெண் குழந்தையான சிறுமி காமு, தெருவில் பாண்டி விளையாடினாள். அப்போது பாண்டி விளையாட்டுக்கான கட்டங்களையும், கோடுகளையும் ஒரு பையன் காலால் அழித்தான். அவனை நோக்கி ஆத்திரத்தோடு,"உங்க மாதிரிதிமிர் பிடிச்சஆம்பளைக் கடங்காரங்களோட கொட்டத்தை ஒடுக்கறேன் பாரு' என்று அவள் பதில் சொன்னதற்காக அவளைப் பாராட்டித் திண்ணையிலிருந்தே கரகோஷம் செய்து சாக்லேட் வாங்கிக் கொடுத்திருந்தார், சுகவனம் பெண்ணுரிமை இயக்கத்தில் அவருக்கு இருந்த வெறி காரணமாக, யார் ஆண்களைத் திட்டினாலும், ஆண்களின் கொடுமையைப் புரிந்து கொண்டு திட்டினாலும், புரியாமலே திட்டினாலும் அவர்களுக்கு அவருடைய பாராட்டுக் கிடைத்தது; பரிசும் கூடக் கிடைத்தது.

"மாமா, இப்ப நீங்க எதுக்காகக் கைதட்டினீங்க? எதுக்காக என்னைக் கூப்பிட்டுச் சாக்லேட் வாங்கித் தர்றீங்க?' என்று அன்றைக்கு அந்த அறியாப் பருவத்துச் சிறுமி காமு கேட்டபோது, "உனக்கு அதெல்லாம் இப்பப் புரியாது அம்மா! உன் மாதிரி ஒவ்வொரு பெண்ணும் நெனைவு தெரிந்து வயசு வந்த பின்பும் அந்த மாதிரி தைரியமா ஒவ்வொரு ஆம்பளைக் கடங்காரனின் கொட்டத்தையும் ஒடுக்கறதுன்னு. துணிஞ்சிட்டீங்கன்னா, அன்னியிலேருந்து பெண் குலம் உருப்பட ஆரம்பிச்சுடும்" என்று பதில் சொல்லியிருந்தார் அவர்.

பல வருஷங்களுக்கு முன்பு நடந்தது இது. ஆண்களையும் அவர்கள் கொடுமைகளையும் அஞ்சாமல் எதிர்க்கும் பெண்கள் உருவாக வேண்டும் என்பது சுகவனத்தின் ஆசை. நாடு முழுவதும் ஒடியாடிநகரங்களிலும் சிற்றூர்களிலும், சமயம் வாய்த்த போதெல்லாம் இந்தக் கருத்துக்களைப் பிரசாரம் செய்தார் சுகவனம். பெண்கள் மகாநாடுகளைக் கூட்டி தீர்மானம் போட்டார். என்ன பிரசாரம் செய்தும் பயன் இல்லை. அவருடைய மனைவியே அவரைக் கேலி செய்தாள்.

“உங்களுக்கு எதுக்கு இந்த வம்பெல்லாம்? யார் எப்படி வேணும்னாலும் போயிட்டுப் போகட்டும். குடுக்கிறவா குடுக்கறா, வாங்குக்கிறவா வாங்கிக்கிறா. நீங்க பிரசாரம் பண்ணி யாரும் எதையும் விட்டுட்டதாகத் தெரியலியே"