பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/466

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1088 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“நான் அதைப் பத்திக் கவலைப்படலே. நாடு பூரா என்னுடைய நல்ல கருத்துக்களை விதைக்கிறேன். எங்கேயாவது ஒரு சின்ன விதை தப்பித் தவறி முளைக்காமலியா போயிடப் போறது?”

"எப்படி முளைக்கும்? நீங்க முளைக்கும்னு சொப்பனம் கண்டுண்டு திண்ணையிலே உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். உங்க சொந்தத் தம்பியே நீங்க புலம்பறதைக் காதுலே போட்டுக்கலியே! அவரோட மூத்த புள்ளை கல்யாணத்துக்கு இருபத்தையாயிரம் கையிலே, வைரத்தோடு,வெள்ளிப்பாத்திரம், முப்பது சவரன்நகை, புள்ளைக்கு ஸ்கூட்டர்னு பெண் வீட்டாரைக் கொள்ளையடிச்சார், போன மாசந்தான் நடந்தது.உங்கதங்கை அடுத்தமாசம் தன் பெண்ணுக்குக்கலியாணம் பண்ணப் போறா. பெண் பிகாம் படிச்சுப் பாங்க்லே ஆபீஸரா இருக்கா. மாசம் ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கறா. ஆனாலும் உங்க தங்கை அவளுக்குக் கைநிறைய வரதட்சிணையைக் கொடுத்துத்தான் மாப்பிள்ளையைத் தேடப்போறா.உங்க உபதேசங்களை உங்களோட சொந்தத் தம்பி தங்கைகளே கேட்டுக்கத் தயாராயில்லாத போது ஊராரா கேட்கப் போறா?”

அவள் சொன்னவை எல்லாம் உண்மைதான்; மனைவியை மறுத்துப் பேச அவரிடம் எந்த வாதமும் இல்லை.

"நீங்க சொல்ற லட்சியங்களை நீங்களே கடைப்பிடிச்சு மத்தவாளுக்கு முன்மாதிரியா நடந்து காமிக்கலாம்னா உங்களுக்கு பகவான் குழந்தை குட்டிகளையே குடுக்கலை”

மனைவி இதையும் சிரித்துக் கொண்டேதான் சாதாரணமாகச் சொன்னாள். ஆனாலும் அவருக்கு இது உறைத்தது. ஆசார்ய சுவாமிகளிடம் போய் ஆசி பெற்றுத் திருமணம் செய்யும் பெரிய மனிதர்கள்கூட அவருடைய உபதேசங்களான, 'வரதட்சினை கூடாது, ஆடம்பரங்கள், ஜானவாசம் எல்லாம் வேண்டாம் என்ற அறிவுரைகளைப் பொருட்படுத்துவதில்லை. வரவரக் கல்யாணம் என்ற புனித உறவு ஒரு வியாபாரம் போல ஆகிவிட்டது. ஆண், பணத்தின் துணையோடு ஒரு பெண்ணைத் தேடிப் போனால் அது பாவமாகவும், குற்றமாகவும் கருதப்படுகிறது. சமூகப் பழிக்கும் இழிவுக்கும் கூட ஆளாகிறது. ஆனால், ஒரு பெண் எத்தனை அழகியாயிருந்தாலும் அவருடைய பெற்றோர் அநியாய விலை கொடுத்துத்தான் அவளுக்குக் கணவனைத் தேட வேண்டியிருக்கிறது. அதை யாரும் பாவமாகவோ குற்றமாகவோ கருதுவதில்லை. சமூகமும் பழிப்பதில்லை.

நினைக்க நினைக்க அவர் மனம் குமுறியது. நாட்டில் ஒரு படித்த பெண்ணாவது இதை எதிர்த்துப் போர்க்கோடி உயர்த்த மாட்டேனென்கிறாளே! சுயமரியாதையுள்ள, மானமுள்ள ரோஷமுள்ள, ஒரு புதுமைப்பெண்கூட இன்னும் இங்கே பிறக்கவே இல்லையா? ஒரு புருஷனின் துணைக்காகவும் சுகத்துக்காகவும், பாதுகாப்புக்காகவும் பெண் கொள்ளை விலை கொடுப்பது அவளுக்கே உறைக்கவில்லையா?

இவ்வளவு அவமானமும், பணப் பேரமும், தாழ்வும் ஏற்பட்டும் குனிந்த தலை நிமிராமல் இதை எல்லாம் பொறுத்துக் கொண்டு எப்படியாவது புக்ககத்தில்