பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இரண்டாம் தொகுதி / ஞானச் செருக்கு * 1089


நுழைந்துவிடத் தயாராயிருக்கும் பெண்கள் உள்ளவரை இந்நாட்டில் பெண்ணுரிமையாவது வெங்காயமாவது!

பெரிய நகரங்களில் பெண்ணுரிமை மகாநாடு என்று போட்டுப் பந்தல் நிறையப் படித்த பெண்களைக் கூடச் செய்து, அவர்களின் உற்சாகமான கரகோஷத்துக் கிடையே முப்பது வருஷமாகத் தாம் முழங்கிய முழக்கங்கள் ஒரு பயனும் அளிக்கவில்லையே என்று எண்ணியபோது சுகவனத்துக்கும் தம் மேலேயே வெறுப்பாயிருந்தது; கோபம் கோபமாக வந்தது.

"நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும்
அஞ்சாத நெறிகளும்
நிமிர்ந்த ஞானச்
செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர்
திறம்புவதில்லையாம்"

என்று பாடிய மகாகவி பாரதியின் புதுமைப் பெண் ஒருத்தியை இந்த இருபதாம் நூற்றாண்டில் தமது எழுபதாவது வயதில் கூட அவரால் எங்கும் காணமுடியவில்லை. மிகவும் ஏமாற்றமாயிருந்தது அவருக்கு. முதுமையும் மனத்தளர்ச்சியும் அவரைப் படுக்கையில் தள்ளி விட்டன. கூட்டங்களுக்குப்போவது குறைந்தது.பெண் விடுதலை, பெண்ணுரிமை பற்றி முழங்கி வந்த அவர், தமது கொள்கைகளில் எந்தத் தவறும் இல்லை என்று இன்னும் திடமாக நம்பினாலும் நாட்டில் அந்தச் சிந்தனைகள் அறவே முளைக்க மறுப்பதை எண்ணிவெதும்பினார். பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்னால் துடுக்குத்தனம் நிறைந்த பேதைச் சிறுமியாயிருந்த போது, 'உங்க மாதிரி ஆம்பிளைக் கடங்காரங்களோட கொட்டத்தை ஒடுக்கறேன் பாருடா என்று ஒரு பையனைப் பார்த்துச் சவால் விட்ட பக்கத்து வீட்டுக் குருக்களின் பெண்ணுக்கு இப்போது கல்யாண வயது. காமு படித்து ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்தாள். மாதச் சம்பளம் அறுநூறு வந்தது. ஆனாலும் அவளுக்குத் திருமணம் ஆக முடியவில்லை. கிட்டத்தட்ட ஐம்பதினாயிரம் ரூபாய் வரை தேவைப்பட்டது. பாவம்! குருக்கள் அவ்வளவு தொகைக்கு எங்கே போவார்? சிரமப்பட்டார்; திணறினார்.

அதை எல்லாம்விட வேடிக்கை, படித்துப் பட்டம் பெற்றும் தங்கள் பையனுக்கு வேலை கிடைக்காததால் பெண் வேலை பார்க்கிறாள், பையன் வேலை கிடைக்காமல் சும்மாயிருக்கிறான் என்று கேவலமாகப் பேசுவார்கள். ஆகவே, கல்யாணத்துக்கு முன்னால் பெண் வேலையிலிருந்து விலகிவிட வேண்டும் என்று குருக்களிடம் நிபந்தனை போட்டிருக்கிறார் ஒரு தந்தை. அது ஒன்று மட்டும் நிபந்தனை அல்ல. கையில் ரொக்கம் பத்தாயிரம், இருபது சவரன் நகை, வைரத்தோடு, பாத்திரம் பண்டங்கள் என்று செலவுள்ள பெரிய பட்டியல் வேறு!

நா.பா. II-30