பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/468

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1090 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

படித்து வேலை பார்க்கத் துப்பில்லாத பையனுக்காக இவ்வளவு சீர் செனத்திகளும் பண்ணி, ஏற்கனவே தான் பார்த்துக் கொண்டிருக்கிற வேலையையும் விட்டுவிட்டுத் திண்டாடக் காமு தயாராயில்லை. அந்த ஏற்பாடு பிடிக்காததால் கல்யாணம் தட்டிப் போயிற்று. சில பையன்கள் சம்பாதிக்கிற, வேலை பார்க்கிற பெண்தான் வேண்டுமென்று வந்தார்கள். ஆனால், பெண் சம்பாதிக்கிறாள் என்பதற்காக வரதட்சினை, இருபது சவரன் வகையறாக் கோரிக்கைகளில் எதையும் அவர்கள் குறைத்துக் கொள்ளத் தயாராயில்லை.

இந்த விவரங்களை எல்லாம் மனைவி மூலந்தான் அறிந்து கொண்டார் சுகவனம் அவரைப் பொறுத்தவரை வெளிநடமாட்டமே இல்லாமற் போயிற்று. படுக்கையோடு படுக்கையாகக் கிடக்கும் நோயாளியாகி விட்டார் அவர்.

இப்படிப் பக்கத்து வீட்டுக்குச் சுமார் ஆறு மாத காலத்தில் பத்துப் பன்னிரண்டு பேர் வந்து பார்த்துத் தட்டிப் போயிற்று. ‘காமுவுக்கு ராசியில்லை' என்று கெட்டபேர் வேறு உண்டாகி விட்டது. படித்த பெண்ணாகிய காமுவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. தடியன் தடியனாக ஆண்பிள்ளைகள் பெற்றோர், சகோதர சகோதரிகளுடன் வந்து இனிப்பு, காரம், காபி சாப்பிட்டுவிட்டுத் தாறுமாறாகக் கேள்வி கேட்டு விட்டுப் பாட்டுப் பாடச்சொல்லி ரசித்துவிட்டுப் போவது ஒரு நடைமுறையாகி விட்டது.

கண்காட்சியில் விற்பனைக்கு ஊதுவத்திக் கடை வைப்பது போல் இந்தியப் பெண்கள் ஆகிவிட்டார்களே! எவன் வேண்டுமானாலும் வந்து மோந்து பார்த்துப் பேரம் கூடப் பேசிவிட்டு வாங்காமலே போய்விட வசதி இருந்தது. காமு உள்ளூர மனம் குமுறினாள்; கொதித்தாள்.

பதின்மூன்றாவது ஆளாக அன்று இன்னொரு பிள்ளை பார்க்கவரப்போவதாகக் குருக்கள் சொல்லியிருந்தார். அலுவலகத்தில் அரை நாள் லீவு போட்டுவிட்டுப் பிற்பகலிலேயே வீடு வந்துவிட்டாள் காமு, தாய் காமுவைச் சிங்காரித்தாள். பெண் பார்க்கும் நாடக விழாவுக்குத் தயாராக்கினாள். இனிப்பு, காரம், காபி எல்லாம் தயாராயின.

பிளட்பிரஷர், பலவீனம், அசதி எல்லாமாகச் சேர்ந்து அன்று சுகவனத்தை மிகவும் தளரச் செய்திருந்தன. அடித்துப்போட்டது போல் படுக்கையில் கிடந்தார். வீட்டுக்கு வெளியே நடமாட்டம் இல்லாது போய் மாதக் கணக்காகிவிட்டது.

மாலை ஏழுமணி இருக்கலாம்.படுக்கையருகே யாரோ விசும்பி விசும்பி அழும் ஒலி கேட்டு சுகவனம் கண்விழித்தார். - -

நன்றாக அலங்கரித்த கோலத்தில் பக்கத்து வீட்டுக் குருக்களின் மகள் காமு கண்ணிரும் கம்பலையுமாக நின்று கொண்டிருந்தாள்.

"மாமா, நீங்கதான் என்னைக் காப்பாத்தணூம், அப்பா என்னை அடிக்க வரா.”

"ஏன்? நீ என்ன தப்புப் பண்ணினே?”