பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/469

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இரண்டாம் தொகுதி / ஞானச் செருக்கு * 1091

“ஒரு தப்பும் பண்ணலே மாமா இன்னிக்குச் சாயங்காலம் என்னை ஒருத்தன் பெண் பார்க்க வந்தான். அவனோட அப்பா அம்மாவும் கூட வந்திருந்தா, எல்லாம் முடிஞ்சு வரதட்சினை பேரம் பேசறப்போ ஒரு ஸ்கூட்டர் கண்டிப்பா வாங்கித் தரணும்னு அந்தப் பையனே வற்புறுத்தினான்.

'இப்ப உடனே முடியாது. கலியாணம் ஆகட்டும், ஆடிக்கு அழைக்கறப்ப ஸ்கூட்டர் விஷயம் கவனிக்கிறேன்’னு அப்பா பணிவாகக் கெஞ்சிப் பார்த்தார்.

அவன் கேட்கலே. இப்பவே வாங்கியாகணும்னு பிடிவாதம் புடிச்சான். இந்தக் கல்யாணத்தையே, அப்பா பரம்பரை பரம்பரையா ஆண்டு அனுபவிச்ச வீட்டை விலைக்கு வித்துத்தான் பண்ணப் போறார். அதுலே ஸ்கூட்டரும் சேர்ந்ததுன்னா அவராலே தாங்க முடியாது. என்னோட போகலே. இன்னும் எனக்கு ரெண்டு தங்கைகள் வேறே இருக்கா, எங்க வீட்டிலே.

நிலைப்படி ஒரமாநின்று இந்தப் பேரத்தைக் கவனிச்சிண்டிருந்த எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. நானும் எவ்வளவோ அடக்கிப் பார்த்தேன். முடியலை திடீர்னு முன்னாலே போய் நின்னு, அப்படீன்னா நீ ஸ்கூட்டரையே தாலி கட்டிக் கல்யாணம் பண்ணிக்கோடா! எனக்குத் தாலி கட்ட வேண்டாம். போடா வெளியிலே' என்று கூப்பாடு போட்டு அவர்களை எல்லாம் துரத்திட்டேன்.

'காரியத்தைக் கெடுத்திட்டியேடி பாவி! நான் கடனோ உடனோ வாங்கி ஸ்கூட்டரைக் குடுத்துட்டுப் போறேன். நீ ஏண்டி குறுக்கே வந்து பேசினே? என்று அப்பா கையை ஓங்கிண்டு என்னைத் துரத்தறார். நீங்களே சொல்லுங்கோ நான் செஞ்சது தப்பா மாமா?”

“ஒரு தப்பும் நீ பண்ணலே, குழந்தை நீ பண்ணினதுதான் சரி. உன்னை, இதுக்காக மனப்பூர்வமாப் பாராட்டறேன்,இந்தா, இதைவச்சுக்கோ” என்று படுக்கைக்கு அருகே ஸ்டுலில் இருந்த பழக்கூடையிலிருந்து ஆப்பிள் ஒன்றை எடுத்துக் காமுவிடம் கொடுத்தார் சுகவனம்.

அவள் பல வருடங்களுக்கு முன்னால் பேதைப் பருவத்துச் சிறுமியாகத் தெருவில் பாண்டி விளையாடும்போது, ‘உன்னை மாதிரி ஆம்பிளைக் கடங்காரங்களோட கொட்டத்தை ஒடுக்கறேனா இல்லையா பாரு' என்று ஒரு பையனிடம் சவால் விட்டபோது கரகோஷம் செய்து சாக்லேட் வாங்கியளித்து அவளைப் பாராட்டிய அதே உற்சாகத்தோடு இப்போதும்படுக்கையில் எழுந்து உட்கார்ந்தார் சீர்திருத்தவாதி சுகவனம்.

அப்போது அவருடைய மனைவி அவருக்குக் காபி கொடுக்க வந்தாள். சுகவனத்துக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. ஒரே உற்சாக மயம் .

"இதோ. பாருடீ காமுவை! நான் தூவிய சிந்தனை விதைகள் எங்குமே முளைக்கலேன்னியே, இங்கே பக்கத்திலேயே முளைச்சிருக்குடி ஸ்கூட்டர் வாங்கித் தந்தால்தான் தாலி கட்டுவேன்னு சொன்ன பேடிப் பயலைப் பார்த்து, நீ