பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/470

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



1092 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

ஸ்கூட்டரையே கட்டிக்கோ போடான்னு மூஞ்சியிலே துப்பிட்டு வந்திருக்கா” என்று மனைவியிடம் காமுவை வியந்து பாராட்டினார். அவர் மனைவி வருத்தப்பட்டாள்

“ஐயையோ! திமிர் பிடிச்ச பொண்ணுன்னு, கண்டபடி யாரையும் எதிர்த்துப் பேசும்னு கெட்டபேராயிடப் போறதே!”

“போடி பைத்தியம்! இது திமிர் இல்லே. இந்தியப் பெண்களுக்கு இப்படி ஒரு ஞானச் செருக்கு வரணும்னு தான் அன்னிக்கே பாரதியார் ஏங்கினார். நானும் ஏங்கினேன். பாரதியாரை விட நான் அதிர்ஷ்டசாலிடி! இதோ என் கண் முன்னாலேயே அப்படி ஒரு பெண்ணை நான் நேரே பார்த்தாச்சு” என்று கூறியபடியே காமுவின் பக்கம் திரும்பி, “நீ கவலைப்படாதே, குழந்தை பெண்மையின் சுதந்திர உணர்வுகளைப் புரிந்து கொண்டு மதிக்கும் உண்மையான நல்ல ஆண்பிள்ளை ஒருவனைத் தேடி உனக்கு நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்று உறுதியளித்தார் சுகவனம்.

“ராத்திரிக்குக் கஞ்சியா? கேப்பைக் களியா?” என்று அவருடைய இரவு உணவைப் பற்றி விசாரித்தாள் மனைவி.

“ரெண்டுமே வேண்டாம். வடை பாயாசத்தோடு சமையல் பண்ணு. உடனே இதைக் கொண்டாடியாகணும்” என்று காமுவை நோக்கிப் புன்னகை புரிந்தபடி மனைவிக்கு மறுமொழி கூறினார் சுகவனம்.

(கலைமகள், தீபாவளி மலர், 1982)