பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/472

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1094

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

உதவியாளருக்கு மந்திரியின் சுபாவம் நன்கு தெரியும். முக்கியமான பைல்களும், பெண்டிங் பேப்பர்களும் இரயில் பயணத்தின் போதுதான் தீர்மானமாகும். பயணத்துக்கு எப்படியும் ‘கூபே’ கம்பார்ட்மெண்ட் ஏற்பாடு செய்தாக வேண்டும். இல்லாவிட்டால் தொலைந்தது. மந்திரி எதை வேண்டுமானாலும் தியாகம் செய்து விடுவார். இரயிலில் பயணம் செய்ய நேரும் போது ‘கூபே’யை மட்டும் அவரால் தியாகம் செய்ய முடியாது; தியாகம் செய்ய விரும்பவும் மாட்டார்.

அன்றோ எக்கச்சக்கமான நிலைமை, கவர்ன்மெண்ட் கோட்டா ஏறக்குறைய தீர்ந்து போய் விட்டிருந்தது. அவரது அந்தஸ்திலுள்ள வேறு பல பிரமுகர்களும் வி.ஐ.பி.களும் அதே இரயிலில் பயணம் செய்தார்கள். மொத்த இரயிலிலும் கூபே இணைத்த பெட்டிகள் ஒன்றோ, இரண்டோ தான் இருந்தன.

கூபே அலாட் ஆகவில்லை என்றால், இரயில்வே பிளாட்பாரத்திலேயே இரைந்து கூப்பாடு போட்டு விட்டுப் பயணத்தை ரத்து செய்து வீடு திரும்பவும் அவர் தயங்க மாட்டார் என்பது பி.ஏ.வுக்கும், செக்யூரிட்டி அதிகாரிக்கும் நன்கு தெரியும். பல முறை அப்படித்தான் நடந்திருக்கிறது.

முன்பு எப்போதோ ஒருமுறை கோபத்தில் ‘கூபே’க்கு ஏற்பாடு செய்யத் தவறிய ஓர் உதவியாளரை வேலையிலிருந்தே சஸ்பெண்ட் செய்திருக்கிறார் அவர். அவருடைய முன் கோபமும் ஆத்திரமும் பிரசித்தி பெற்றவை. தமது அதிகார வரம்புக்கு அப்பால் இருப்பவர்கள் என்று பாராமல், இரயில்வேக்காரர்களைக் கூட வாட்டி எடுத்து விடுவார் அவர். கோபத்தில் கண்மண் தெரியாது அவருக்கு.

மாலை ஏழே கால் மணிக்கு இரயில் புறப்படுகிறது என்றால், ஆறரை மணிக்கே மந்திரியின் உதவியாளரும், செக்யூரிட்டி அலுவலரும் ஸ்டேஷனுக்கு வந்து விட்டார்கள். ஃபைல்கள் அடங்கிய அரசாங்கப் பெட்டிகளும் வந்து விட்டன. மந்திரி ஏதோ ஒரு திறப்பு விழாவுக்காகப் போய் இருந்தார். விழாவை முடித்துக் கொண்டு அங்கிருந்தே நேராக இரயில் புறப்படுகிற நேரத்துக்கு ஸ்டேஷனுக்கு வந்து விடுவதாக ஏற்பாடு.

ஆனால், அன்று மிகவும் சோதனையாகி விட்டது. பி.ஏ.வுக்கும் செக்யூரிட்டி அலுவலருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த இரயிலின் பதினேழு பெட்டிகளிலுமாக நாலைந்து முதல் வகுப்புப் போகிகள்தான் இருந்தன. அதில் மூன்றே மூன்று ‘கூபே’கள்தான் உண்டு. ஒரு ‘கூபே’ மத்திய உதவி மந்திரி ஒருவருக்கு அலாட் ஆகியிருந்தது. அதை ஒன்றும் செய்ய முடியாது. மற்றொரு ‘கூபே’ இரயில்வே போர்டில் மிகவும் செல்வாக்குள்ள உறுப்பினர் ஒருவருக்கு அலாட் ஆகியிருந்தது. மூன்றாவது ‘கூபே’தான் தனியாருக்கு அலாட் ஆகியிருந்தது. அன்றுதான் திருமணம் முடிந்து தேனிலவுக்கு வெளியூர் புறப்படும் புதுமணத் தம்பதிகளுக்காக அந்தக் ‘கூபே’ ஏற்பாடாகி இருந்தது.

இரயில் புறப்பட இருபது நிமிஷம்தான் இருந்தது, அந்தப் புதுமணத் தம்பதிகள் ‘கூபே’யில் வந்து அமர்ந்தும் விட்டார்கள். இன்னும் மந்திரி வரவில்லை. பி.ஏ.யும் அதிகாரிகளும் காத்திருந்தனர்.