பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/473

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : கூபே

1095

மந்திரிக்காக ஏதாவது செய்வதாயிருந்தால் புதுமணத் தம்பதிகள் வந்து அமர்ந்திருக்கும் இந்த மூன்றாவது ‘கூபே’யைத்தான் மாற்ற வேண்டியிருக்கும் என்றும், மத்திய உதவி மந்திரி, இரயில்வே போர்டு அங்கத்தினர் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ‘கூபே’யை எதுவும் செய்ய முடியாது என்றும் இரயில்வேக்காரர்கள் கையை விரித்து விட்டார்கள். புதுமணத் தம்பதிகளுக்கு வழியனுப்ப வந்தவர்கள் போட்ட ரோஜா மாலைகள் கூபேயை நிரப்பிக் கொண்டிருந்தன. பிளாட்பாரத்தின் அந்தப் பகுதியெல்லாம் ரோஜா இதழ்கள் சிதறி விட்டன. ஒரே கூட்ட மயம். உற்சாகச் சிரிப்புகள், ஜோக்குகள்.

அவர்களை எப்படி ‘டிஸ்டர்ப்’ செய்வதென்று தெரியாமல் இரயில்வே அதிகாரிகள் தயங்கினர்.

“இந்த மந்திரிங்களாலே எப்பவுமே தொந்தரவுதான் சார்! கடைசி நிமிஷத்திலே வந்து கழுத்தை அறுப்பாங்க…”என்று துணிந்து சொன்னார் ஒரு இரயில்வே அதிகாரி.

அந்தப் புதுமணத் தம்பதிகளைத் தவிர, உற்சாகமாக அவர்களை வழியனுப்ப வந்திருக்கும் உறவினர்களிடமும் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்குமே என்று இரயில்வே அதிகாரிகள் பயந்தார்கள்.

“கூபே ஏற்பாடு செய்யவில்லை என்றால் மந்திரி என்னைத் தொலைத்துவிடுவார்” என்றார் பி.ஏ. உடனே அந்தப் புதுமணத் தம்பதிகளிடம் போய் அவர்களுக்குக் கூபே கிடையாது என்றும் முதல் வகுப்பில் இரண்டு லோயர் பெர்த்துக்கள்தான் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் தங்களுக்கு ரிசர்வ் ஆகியிருப்பதைச் சொல்லி இரைந்தார்கள்.வெளியே வழியனுப்ப வந்திருந்த உறவினர்களும் கூப்பாடு போட்டார்கள்.

“என்னய்யா அக்கிரமம் இது?ரிஸர்வ் ஆகி ‘சார்ட்’ல கூடப் பேர் போட்டப்புறம் இடத்தைத் தட்டிப் பறிக்கிறார்களே? மந்திரின்னா என்ன கொம்பா முளைச்சிருக்கு! நாங்க சொந்தக் காசிலே செலவழிச்சுப் பிரயாணம் செய்யறோம். மந்திரியைப் போல அரசாங்கச் செலவிலே பிரயாணம் பண்ணலே. மந்திரிக்கு ஒரு நியாயம் ஜனங்களுக்கு ஒரு நியாயமா?”

இந்தக் குழப்பத்துக்கு நடுவே மந்திரி பிளாட்பாரத்துக்கு வந்து விட்டார். பதவியில் இருப்பவர்களுக்கே உரிய சுறுசுறுப்புடன், உடனே சுற்றி நடப்பதைப் புரிந்து கொண்டு உஷாராகிவிட்டார். பி.ஏ.யும் அருகில் வந்து காதோடு நிலைமையை விவரித்தார்.

ஒன்றுமே செய்ய முடியாதபடி ஒரு கையாலாகாத நிலை உருவாகும் போது, அதையே ஒரு தியாகமாக மாற்றிக் காண்பித்து விடும் தேர்ந்த அரசியல்வாதியின் சாமர்த்தியத்தைக் கையாண்டு விரைந்து செயல்பட்டார் மந்திரி.

மந்திரிக்குத் திறப்பு விழாவில் போட்டிருந்த இரண்டு சந்தன மாலைகளும், அவர்கள் வழங்கியிருந்த இரண்டு ஆப்பிள்களும் கைவசம் இருந்தன. கூடவே