பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/474

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1096

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

வந்திருந்த இரண்டொரு பத்திரிகை நிருபர்களும் புகைப்படக்காரர்களும் உடனிருந்தார்கள்.

மந்திரி திடீரென்று ஒரு ஸ்டண்ட் அடித்தார். கூபே கம்பார்ட்மெண்டில் நுழைந்து சந்தன மாலைகளை அந்த ஊர் பேர் தெரியாத மணமகனிடம் அளித்துத் தம்பதிகளை மாலை மாற்றிக் கொள்ளச் செய்தார். இருவரிடமும் கைவசம் இருந்த ஆப்பிள் பழங்களைக் கொடுத்து வாழ்த்தினார். உடனிருந்த நிருபர் ஒருவர் அதைப் புகைப்படம் எடுத்துக் கொள்ள முடிந்தது.

“உங்களைப் போன்ற மணமக்களுக்கு இடையூறாக நான் வரவிரும்பவில்லை. என் பயணத்தை நான் உங்களுக்காகவே இரத்துச் செய்கிறேன். இந்த ‘கூபே’யை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். முப்பது வருஷங்களுக்கு முன் திருமணமான முதல் இரவிலேயே இரயிலில் இட வசதி கிடைக்காத காரணத்தால், நானும் என் இளம் மனைவியும் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் பாத்ரும் ஓரமாக வராந்தாவில் ஒண்டி, ஒதுங்கிப் பயணம் செய்த அந்தக் கொடுமையான அனுபவத்தை நான் இன்னும் மறந்து விடவில்லை.

“அப்படி ஒரு துயரம் உங்களுக்கு இன்று நேர நான் காரணமாகி விடக் கூடாது. நீங்கள் மகிழ்ச்சியாகத் தேனிலவு சென்று வாருங்கள்” என்று கண்களில் நீர் பனிக்கக் கூறினார். இரயில் கம்பார்மெண்டில் உள்ளே, வெளியே கூடியிருந்த அனைவரும் ஒரு நிமிஷம் அப்படியே உருகிப் போய் விட்டார்கள்!

கையிலிருந்து தவறிக் கீழே விழுந்து விட்ட ஆப்பிளை எடுக்க மணமக்கள் இருவரும் ஒரே சமயத்தில் குனியவும், விழுந்த ஆப்பிள் மந்திரியின் காலடிக்கு ஓடி உருளவும் சரியாயிருந்தது. மணமக்கள் மந்திரியைக் காலில் விழுந்து வணங்குவது போல் தோன்றிய அந்தக் காட்சியைப் புகைப்பட நிபுணர் கச்சிதமாகப் படம் பிடித்துக் கொண்டார்.

மறு நாள் காலைப் பத்திரிகைகளில் எல்லாம் மந்திரியின் தியாகம் முதல் பக்கத் தலைப்புச் செய்தியாகி விட்டது. தடபுடல் பட்டது.

‘மந்திரியின் தியாகம் பெருந்தன்மையோடு தமக்கு ஒதுக்கப்பட்ட ‘கூபே’ கம்பார்ட்மெண்டைத் தேனிலவு செல்லும் புதுமணத் தம்பதிகளுக்கு விட்டுக்கொடுத்து விட்டு வீடு திரும்பினார். மணமக்கள் ஆசி கோரி அமைச்சரைக் காலில் விழுந்து வணங்கினர். முப்பது வருடங்களுக்கு முன்பு தமது சொந்தத் தேனிலவுப் பயணத்தில் ஏற்பட்ட சிரமத்தை நினைத்து அமைச்சர் கண்ணிர் சிந்தினார்.’

என்பது போல் புகைப்படங்களுடன் தலைப்புச் செய்திகள் வெளியாகியிருந்தன. கீழே விழுந்த ஆப்பிளை எடுக்க மணமக்கள் குனிந்தது, காலில் விழுந்து வணங்கிய படமாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. உண்மையில் புதுமணத் தம்பதிகளுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த ‘கூபே’யைத் தட்டிப் பறிக்க மந்திரி முயன்றதும், அது பலிக்காத போது வேறு வழியில்லாமல் தியாகியாகியதையும் பற்றி ஒரு பத்திரிகை கூட மூச்சு விடவில்லை.