பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1100

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

அடிபட்டுச் செல்லம்மாளின் உடம்பெல்லாம் காயமாயிருப்பது போல் அப்போது அவளுக்கு நினைக்கவும், கற்பனை செய்யவும் தோன்றியது.

கலாதேவிக்குச் செல்லம்மாள் மேல் அனுதாபம் பொங்கியது. அவளுக்காக இரக்கப்பட்டாள். பட்டுப் போல மென்மையும், தந்தம் போல் வெளேரென்ற நிறத் கவர்ச்சியும் உள்ள தன் மேனியழகையும், அம்மை வடுக்களும் காயங்களும் நிறைந்த செல்லம்மாளின் முற்றிய உடம்பையும் ,மனக்கண்ணில் ஒப்பிட்டுப் பார்த்தாள் அவள். அந்த ஒப்பீட்டில் செல்லம்மாளைப் பற்றிப் பெருமைப்பட எதுவுமே இல்லை.

‘நல்ல வேளை! யார் செய்த புண்ணியமோ, வாழ்க்கைத் தொழுவத்தில் சிக்காமலே, புகழ் ஏணியின் உச்சியில் இருக்கிறேன். இன்று ஏதோ தேர்த் திருவிழா கொண்டாடுவது போல் எனது நூறாவது பட விழாவை மக்கள் கொண்டாடுகிறார்கள்.’

பொழுது விடிந்ததும் செல்ல்ம்மாள் வேலைக்கு வந்த போது அவள் முகம் முதல் நாள் இரவு முழுவதும் அழுது அழுது வீங்கினாற் போல் இருந்தது. கலாதேவி அவளைக் கேட்டாள்.”என்னடீது? ராத்திரி உம் புருஷனோட ஏதாவது சண்டையா?”

“சாராயமும், சண்டையும் இல்லாத நாளே கெடையாதும்மா?”

“அப்படியாவது அந்தப் புருஷனுக்காக ஏண்டி உயிரை விடறே? ‘டைவர்ஸ்’ பண்ணிக்கிறதுதானே?”

“ஐயே! அதெப்பிடீம்மா முடியும்?”

“ஏன் முடியாது?”

“ஆயிரம் இருந்தாலும் அது எம் புருஷனாச்சே?”

“அப்படியானா உனக்கு வேற வழியே இல்லை. திண்டாட வேண்டியதுதான்.”

“இன்னிக்கு விழாவுக்கு அதுகூட வரணும்னிச்சு. உங்க யசமானிம்மா கிட்டச் சொல்லி ஒரு பாஸ் வாங்கியாந்து குடுன்னு கேட்டிச்சும்மா”

“சாயங்காலமானால் சாராயக்கடைக்குப் போறவன், நூறாவது பட விழாவுக்கு எங்கேடிவரப்போறான்? வந்தாலும் குடிச்சுட்டு கலாட்டா பண்ணாம இருப்பானா?”

“அதெல்லாம் ஒண்ணும் பண்ணாதும்மா. உங்க நடிப்புன்னா அதுக்குப் பிரியம்.”

அடிபட்டு உதைப்பட்டு மாடாகத் தேய்ந்தாலும், செல்லம்மாளுக்குத் தன் குடிகாரப் புருஷன் மேலுள்ள பிரியத்தின் மர்மத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் திணறினாள் திருமணமாகாத நட்சத்திரம் கலாதேவி. மணவாழ்க்கையால் பெண் அடிமைப்படுகிறாள் என்பதே அந்த விநாடி வரை மணவாழ்க்கையைப் பற்றி அவள் கணிப்பாயிருந்தது. அதற்கு மேல் ‘புருஷன்’ என்ற வார்த்தையின் அர்த்தம் அவளுக்குப் புரியவில்லை.

அன்று மாலை அவளுடைய நூறாவது படவிழா ஆடம்பரமாகத் தொடங்கியது. பயங்கரமான ரசிகர்கள் கூட்டம். கூட்டத்திலும் ஜன நெருக்கடியிலும் சிலர் நசுக்குண்டு மிதிப்பட்டு இறந்து போய் விடுவார்களோ என்னுமளவு ஒரே மக்கள் வெள்ளம்.