பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/479

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : ஊமைக் காயம்

1101

விழா நாயகி நடிகையர் ரத்தினம் கலாதேவிக்குத் துணையாக வேலைக்காரி செல்லம்மாளும் சென்றிருந்தாள். வேறு பல நடிகைகள், நடிகர்கள் திரளாக வந்திருந்ததால், எல்லோரையும் ஒரு சேரக் காணலாம் என்ற ஆவலில் கூட்டம் அலை மோதியது. -

விழா மேடைக்குப் பின்னால் கையில் வீட்டிலேயே போட்டு எடுத்துச் சென்றிருந்த காபி பிளாஸ்க்குடன் அடக்க ஒடுக்கமாக நின்றிருந்தாள், செல்லம்மாள். கலாதேவிக்கு அவுட்டோர் ஷூட்டிங் நாட்களில் காபி சிற்றுண்டி, சாப்பாடு எல்லாமே வீட்டிலிருந்து செல்லம்மாள்தான் எடுத்துச் செல்வாள். அதே போல் இன்று விழாவுக்கும் காபி எடுத்துக் கொண்டு வந்திருந்தாள்.

விழா மேடையில் அழகு ராணியாக வீற்றிருந்த கலாதேவி கூட்டத்தைக் கம்பீரமாக நிமிர்ந்து பார்த்தாள்.

தனக்கு எதிரே தெரிந்த பறட்டைத் தலையும், களைந்த முகமுமான பல ஆண்களில் யாராவது ஒருவன்தான் செல்லம்மாளின் கணவனாயிருக்க வேண்டுமென்று ஏளனமாகத் தன் மனத்துக்குள் நினைத்துக் கொண்டாள் கலாதேவி.

நிலை கொள்ளாமல் மோதும் அந்தப் பெரிய கூட்டத்தில் மின்சாரத் தடங்கலால் ஒரு நிமிஷம் திடீரென்று இருள் சூழ்ந்தது. இருட்டில் கூட்டம் மேலும் தடுமாறவே, கலாதேவி முதலிய பெண் நட்சத்திரங்கள் அமர்ந்திருந்த மேடை சரிந்து விட ஒரே அமளி, கூச்சல் குழப்பம் உண்டாயிற்று விளக்குத் திரும்ப வந்தும்கூடச் சந்தடிசாக்கில், நடிகைகள் மேல் ரசிகர்கள் மோத ஆரம்பிக்கக் கூக்குரல் எழுந்தது. பரபரப்பிலும், குழப்பத்திலும் நடிகை கலாதேவியே கூட்டத்தில் சிக்கித் தடுமாறி கீழே விழுந்து விட அவளைத் தூக்க வேலைக்காரி செல்லம்மாள் ஓடி வந்தாள்.

செல்லம்மாளையும் முந்திக் கொண்டு வேறு இரண்டொரு ரசிகர்கள் கலாதேவியைத் துரக்கி விட ஓடி வரவே, செல்லம்மாளும், அவர்களும் எதிரெதிராக மோதிக் கொள்ளும்படி நேரிட்டு விட்டது.

செல்லம்மாள் மேல் மோதியவர்கள் ஆண் பிள்ளைகளாயிருப்பதைப் பார்த்தபடி, தூரத்தில் நின்றியிருந்த அவள் கணவன், 'டாய்! யார்ரா பேமானி! கீச்சுப்புடுவேன் கீச்சு” என்று கத்தியோடு கூட்டத்தில் அவர்கள் மேல் பாய்ந்தான்.

“கண்ட கஸ்மாலம்லாம் கையைப் புடிச்சு இஸ்த்துக்கினு போக இது சினிமா எக்ஸ்ட்ரான்னு நினைச்சியா? என் பொஞ்சாதிடா இது ஜாக்கிரதை!” என்று அந்த ஆண்களை எச்சரித்து, மிரட்டி விட்டுச் செல்லம்மாளை மட்டும் ஒதுக்கி அழைத்துச் சென்றான் அவள் கணவன்.

தடுமாறிக் கீழே விழுந்து கிடந்த விழா நாயகியாகிய தன்னைத் திரும்பிக் கூடப் பார்க்காமல், தனக்கு உதவ வந்த ஆண்கள் செல்லம்மாளைத் தீண்டி விட்டார்கள் என்பதற்காகவே, அவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டும் அந்த முரட்டு ஆண்மை கலாதேவியை ஒரு கணம் பிரமிக்கச் செய்து விட்டது.