பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/480

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1102

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“யார்ராவன்? விழா நாயகியே இங்கே கீழே விழுந்துட்டாங்க? என்னடான்னா அம்மாவோட விழுந்த யாரோ ஒரு பொம்பளையைத் தொட்டுப்புட்டோம்னு கத்தியைக் காட்டி மிரட்டறான்?” என்று பேசிய இரண்டு சினிமா உலகப் பிரமுகர்கள் பக்கம் திரும்பி, “இந்தாய்யா! அதெல்லாம் வேற இடத்துல வச்சுக்க. நம்ப கையில் வாண்டாம். சினிமாக்காரியை இன்னா வேணாப் பண்ணிக்க. இது குடும்பப் பொண்ணு. எம் பொஞ்சாதி. எவனாவது தொட்டே,கொடலை வுருவிடுவேன்” என்று மீண்டும் கத்தியைக் காட்டிச் சீறினான் செல்லம்மாளின் புருஷன். பாதி குடிபோதை வேறு.

அந்தக் கணத்தில் மின்வெட்டுப் போல் கலாதேவியின் மனத்தில் ஒரு பொறி தட்டியது.

சதா சாராயத்தையே கட்டிக் கொண்டு அழும் அந்தக் குடிகாரக் கணவனைச் செல்லம்மாள் விடாமல் கட்டிக் காத்துப் பணிவிடை செய்யும் மர்மமும், இரகசியமும் கலாதேவிக்கு இப்போது புரிவது போல் இருந்தது.

இந்த அளவு முரட்டுப் பிரியத்தைத் தருகிற ஓர் ஆண்பிள்ளையிடம் ஒரு பெண் எத்தனை தடவை அடிபட்டாலும் ,அவனால் தன் உடல் முழுவதும் காயமானாலும், அவனை விட்டுப் பிரிய மாட்டாள் என்று தோன்றியது.

யாரோ வந்து சமாதானப்படுத்தி அவனைத் தனியே அழைத்துக் கொண்டு போனார்கள். செல்லம்மாளும் கூட வந்தால்தான் போவேன் என்றான் அந்த முரடன். செல்லம்மாள் தயக்கத்தோடு எஜமானி கலாதேவியின் முகத்தைப் பார்த்தாள். எஜமானி பிளாஸ்கை வாங்கிக் கொண்டு, ‘நீ போ; பரவாயில்லை’ என்பது போல் அவளுக்கு உத்தரவு கொடுத்தாள். அவள் கணவனோடு போனாள்.

குடித்து விட்டு வீடு திரும்பும் முரட்டுக் கணவனிடம் அடிபட்டு அடிபட்டுச் செல்லம்மாளின் உடம்பெல்லாம் காயம் பட்டிருப்பதாகத் தான் முன்பு கற்பனை செய்திருந்த காயங்களை விட ஆழமான, ஆனால் வெளியே தெரியாத ஊமைக் காயம் தன்னைத் தானே தாங்கி நிற்பது போல், அந்தக் கணத்தில் விழா நாயகியான நடிகையர் ரத்தினம் கலாதேவிக்குத் தோன்றியது.

“சினிமாக்காரியை இன்னா வேணாப் பண்ணிக்க, இது குடும்பப் பொண்ணு, எம் பொஞ்சாதி” என்ற அந்த முரட்டுக் குடிகாரக் கணவனின் கொச்சை வார்த்தைகள், அவன் உருவி நீட்டிய கத்தியை விடக் கூராயிருந்தன. அந்தக் கூர்மை தொலைவிலிருந்தே எங்கோ அவளைக் காயப்படுத்தியிருந்தது.


(கலைமகள் பொன் விழா மலர், 1982)