பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/482

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1104

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

உள்ள சிரமங்களைச் சொல்லி மற்றவர்கள் அவளைப் பயமுறுத்தினார்கள். ஆக உயர் கல்வியும், ஆராய்ச்சித் துறைகளும் எல்லாம் பயத்துக்கும் பயமுறுத்தல்களுக்கும் நடுவே இருந்தன.

அவளைப் போல் புதுமைப் பெண்ணாக வளர்ந்து விட்ட ஓர் இளம் பெண்ணுக்கு மற்றெல்லாத் தகுதிகளும் இருந்தும் கூட, ஆராய்ச்சிக்காக அங்கீகரிக்கப்பட்ட ஓர் வழிகாட்டி கிடைக்கவில்லை. இடமும் அகப்படவில்லை.

“சுகுணா, நீ கல்லூரி நாட்களில் மறியல், போராட்டம் என்று நிறையச் செய்து விட்டாய். சில பேராசிரியர்களைக் கூட விரோதித்துக் கொண்டு விட்டாய். அதனால்தான் இப்போது இந்தச் சிரமம் எல்லாம். அடங்கிய பெண்ணாகக் கல்லூரி நாட்களைக் கழித்திருந்தால், இந்தச் சிரமமெல்லாம் இப்போது உனக்கு ஏற்படாது” என்றாள் சுகுணாவின் தோழி ரத்னா.

“தெரியாமல் சொல்கிறாய் ரத்னா! அடங்கிய பெண்ணாக இருந்திருந்தால், நான் படித்து மேலே வந்திருக்கவே முடியாது. போராடுகிறவர்களுக்கு மட்டுமே, இந்த உலகம். பயப்படுகிற உலகத்தில் தான் இன்று நாமும் வாழ்கிறோம்.”

இதற்கு ரத்னாவால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை. தாராள மனப்பான்மையும், பெருந்தன்மையும் உதவுகிற குணமும் இல்லாதவர்கள்தாம் கல்வித் துறையில் பெரியபெரிய பதவிகளில் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். நிறையப் பேர் நன்றாகப் படிக்க வேண்டும், பட்டங்கள் பெற வேண்டும் என்று நினைப்பதற்குப் பதிலாக, நிறைய பேர் படிக்க வேண்டாம், பட்டங்கள் பெற வேண்டாம் என்று நினைக்கிற மனப்பான்மையே பல ஆசிரியர்களிடம் இருந்தது.

புரொபஸர் ரத்னவேல் ராஜ் என்பவரிடம் ஒதுக்கப்பட்டிருந்த ‘கோட்டாவில்’ ஓர் இடம் மீதமிருக்கிறது என்று கேள்விப்பட்டு, அவரைச் சந்திக்கப் போனாள் சுகுணா.

வியர்வை ஆறாக ஒடுகிற கடுமையான கோடைக் காலத்திலும் சூட், கோட், டை உட்பட அணிந்து, பைப் புகைத்துக் கொண்டிருந்தார் அவர். கறுப்புத் துரையாகக் காட்சி அளித்தார்.

சுகுணாவின் நேரத்தில் ஒரு மணிக்கு மேல் எடுத்துக் கொண்டு விட்ட அவர், தாம் ஆக்ஸ்போர்டில் படிக்கப் போனது, வந்தது, எல்லாவற்றையும் விவரித்து விட்டு அவளுடைய ஆராய்ச்சி பற்றி யோசித்து முடிவு செய்து பிறகு சொல்வதாக நழுவி விட்டார். நாசுக்காக அவள் என்ன சாதி என்றறியும் முயற்சியிலும் இறங்கினார் அவர்.

அடுத்து அவள் பார்த்த மனிதர் டாக்டர் தாமஸ். அவர் தம்மிடம் இருந்த ஒரே இடத்தை யாரோ மந்திரி சிபாரிசு செய்த ஒரு மாணவருக்காகப் பதிவு செய்து விட்டதாகவும், தம்மைத் தேடியலைந்து இனி அவள் நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை என்றும் கூறி முகத்தில் அடித்தது போல் மறுத்து விட்டார்.

மூன்றாம் மனிதராக அவள் சந்தித்தவர் இளைஞரான டாக்டர் வீரபத்திரன்.