பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/483

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : கடைசியாக ஒரு வழிகாட்டி

1.105

“இதோ பார் அம்மா! நான் கூடியவரை பெண்களை ரிஸர்ச் ஸ்டுடண்ட்ஸா எடுத்துக் கொள்ள வேண்டாம்னு கொள்கை வைத்துக் கொண்டிருக்கிறேன். நான் கொஞ்ச வயசுக்காரன்; திருமணமாகாதவன்; பெண்களுக்குக் ‘கெய்டா’ இருந்தா வீண் கதை கட்டி விட்டுடுவாங்க. மனம் விட்டுச் சொல்றதுக்காக நீங்க வருத்தப்படக்கூடாது. மன்னிக்க வேணும், ஸாரி” என்று பயந்து ஒதுங்கினார் வீரபத்திரன்.

அடுத்துப் பார்த்த புரொபஸர் கனி என்பவரும் ஏதோ சாக்குப் போக்குச் சொல்லிக் கத்தரித்து அனுப்பி விட்டார்.

இந்தப் பேராசிரியர்கள் எல்லாரும் நவநாகரிகமாக உடை அணிந்திருந்தார்கள். ஆனால், இவர்கள் மனம் மிகவும் அநாகரிகமாக இருப்பதை அவள் உணர்ந்தாள். அவர்கள் மிக அழகாக ஆங்கிலம் பேசினார்கள், ஆனால், ஆங்கிலேயர்களிடம் உள்ள தாராள மனமும், பெருந்தன்மையும் கிஞ்சித்தும் இவர்களிடம் இல்லை. ஆங்கில நடை பாவனைகளும், குறுகிய இந்திய மனமுமாக இவர்கள் உலவினார்கள்.

சுகுணாவுக்குப் படிப்பிலேயே வெறுப்பு வந்து விட்டது. பி.எச்.டியே வேண்டாமென்று கூட விரக்தி ஏற்பட்டது.ஆராய்ச்சிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களுக்கு ஆராய்ச்சி செய்ய வாய்ப்பில்லை. விருப்பமும், தகுதியும் அற்றவர்கள் மீது ஆராய்ச்சிகள் திணிக்கப்படுகின்றன. ஆராய்ச்சித் துறைகளையும், ஆராய்ச்சிக்கு வழி காட்ட வேண்டிய பேராசிரியர்களையும், அவர்களின் ஊழல்களையும் பற்றியே ஒரு பெரிய ஆராய்ச்சி செய்ய வேண்டும் போல இருந்தது. ஆனால், எந்தப் பல்கலைக் கழகமும் அப்படி ஓர் ஆராய்ச்சியை ஏற்று, அதற்குப் பட்டம் வழங்கத் தயாராயிராது.

ஏமாற்றமும், விரக்தியோடு கூடிய கசப்பு உணர்ச்சியுமாக அவள் ஆராய்ச்சி செய்யும் எண்ணத்தையே கை விட்டு விட்டு, ஏதாவது குமாஸ்தா வேலைக்குப் போய்த் தொலைக்கலாம் என்று இருந்த போது, கடைசியாக விசாரிப்பதற்கு இன்னும் ஒரே ஒருவர் மீதமிருப்பது தெரிய வந்தது. பெரிய நம்பிக்கை ஒன்றும் இல்லை. அதையும் பார்த்து விடலாம் என்று தான் தேடிப் போனாள்.

“பொன்மலர்க் கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்று, மறுபடி அங்கேயே யூ.ஜி.ஸி. ஆராய்ச்சிப் பேராசிரியராக இருந்த ஒரு வயதானவரிடம் யாருமே இன்னும் ரிஜிஸ்தர் செய்து கொள்ளவில்லை.காரணம், அந்தப் பேராசிரியர் ‘ஸ்டிரிக்ட் டிஸிப்ளினேரியன்’. நிரம்ப கர்நாடகமான ஆள்.பத்தாம் பசலி ஆசாமி என்று நிறைய மாணவர்கள் போகப் பயப்படுகிறார்கள். மெத்தடாலஜி டெஸ்ட் முடிவதற்குள்ளேயே கசக்கிப் பிழிந்து விடுவாராம்” என்று தோழி ரத்னா வந்து சொன்னதிலிருந்து தான் அந்தத் தகவலே சுகுணாவுக்குத் தெரிந்தது.

“அந்த மனிதரின் பேர் என்னடி ரத்னா?” என்று சுகுணா கேட்டதற்கு, “பேர் நினைவு இல்லை. ஏதோ பழங்காலப் பேர். மறந்து போச்சு. கடைசிலே நாயுடுன்னு முடியும். ஆனால், கண்டுபிடிக்கிறது ரொம்பச் சுலபம். அந்த டிபார்ட்மெண்ட்டிலே அவர் ஒருத்தர்தான் யூ.ஜி.ஸி. புரொபஸராம். எல்லாரும் டாக்டர் நாயுடுன்னுதான் கூப்பிடுவாங்க”


நா.பா. II - 31