பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1106

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

புறநகரில் அவர் குடியிருக்கும் வீட்டு விலாசத்தையும் ரத்னாவே குறித்துக் கொடுத்திருந்தாள்.

கடைசியாக முயன்று பார்த்து விடலாம் என்று சுகுணா, டாக்டர் நாயுடுவைத் தேடிப் போனாள். அமைந்தகரைக்கும் அப்பால் கோயம்பேடு போகிற வழியில் ஒரு தென்னந்தோப்பிற்கு நடுவில் இருந்தது அந்தப் பழங்கால வீடு. வீடே கோவில் போல் இருந்தது. முகப்புக் கதவின் மர நிலைப் படியில், நாமமும் இருபுறமும் சங்கு சக்கரமும் இருந்தன. டாக்டர் சந்தான கிருஷ்ணநாயுடு எம்.ஏ, பிஎச்டி, என்று சிறிய பிளாஸ்டிக் போர்டும் இருந்தது.

முன் திண்ணையில் பட்டையாக நாமம் தீட்டிக் கொண்டு, காதில் சங்கு சக்கரக் கடுக்கண் அணிந்த கிழவர் ஒருவர், கிழிந்து போன காஞ்சீபுரம் பழுக்காக்கரை வேஷ்டி ஒன்றை ஊசி நூலில் கவனமாகத் தைத்துக் கொண்டிருந்தார்.

பக்கத்தில் தடிமனாக நாலாயிர திவ்யப் பிரபந்தம் என அட்டையில் அச்சிட்ட பெரிய புத்தகம் ஒன்று கிடந்தது.

இதைப் பார்த்ததும், கல்லூரி நாட்களில் நாமம் விபூதிப் பட்டை அணிந்த பேராசிரியர்களைத் தானும் சக மாணவ மாணவிகளும் விதவிதமாகக் கிண்டல் செய்திருப்பது அவளுக்கு நினைவுக்கு வந்தது. ஒரு சமயம் நாமம் போட்ட ஹிஸ்டரி புரொபஸர் ஒருவர் கலந்து கொண்ட வரலாற்றுக் கழகத் தொடக்க விழாவில் அவளும் சக மாணவர்களில் ரெளடிகளான சிலரும் அழுகிய தக்காளி, முட்டைகளை எறிந்து கலாட்டா செய்திருந்தனர். பஞ்சாங்கக்காரர்கள் போலவும், புரோகிதர்கள் போலவும் தோற்றமளித்த சில பழங்கால ஆசிரியர்களை வகுப்புகளில் கிண்டல் செய்த சம்பவங்களும், “புரோகிதரா, புரெபஸரா?” என்று சுவர்களில் எழுதி வைத்ததும் நினைவுக்கு வந்தன.

“யாரும்மா? என்ன வேணும்?” பழைய வேஷ்டி தைத்துக் கொண்டிருந்த நாமக்காரக் கிழவர் அவளை நிமிர்ந்து பார்த்துக் கேட்டார்.

சுகுணா சிந்தனை கலைந்து, இந்த உலகிற்கு வந்தாள்.

“புரொபஸர் சந்தானகிருஷ்ண நாயுடு அவர்களைப் பார்க்க வேணும்” என்று ஆங்கிலத்தில் சொன்னாள்.

“திண்ணையில் உட்கார் அம்மா.”

அந்தக் கிழவருக்கு ஆங்கிலத்தில் பேச வராததால்தான், தனது ஆங்கில வினாவுக்குத் தமிழில் பதில் சொல்கிறார் என அவளாக நினைத்துக் கொண்டாள். கிழவர் புரொபஸரின் அண்ணாவாகவோ, தந்தையாகவோ இருக்க வேண்டும் என்பது அவள் அனுமானம்.

நாமக்காரக் கிழவர் உள்ளே எழுந்து போனார். அவள் திண்ணையில் உட்கார்ந்தாள்.