பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/485

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : கடைசியாக ஒரு வழிகாட்டி

1107

உபதேச ரத்னமாலை. நித்யாது சந்தானம், திவ்யார்த்த தீபிகை என்று சமய நூல்களாகத் திண்ணையில் அடுக்கியிருந்தன. ஒரு வர்த்தகத் துறைப் படிப்பின் பேராசிரியர் வீட்டு முகப்பில் ஒரே சமய சம்பந்தமான புத்தகங்களாக இருந்ததைக் கண்டு அவளுக்கு என்னவோ போல் இருந்தது. இதற்கு முன்னால் அவள் தேடிச் சென்றிருந்த டாக்டர் ரத்னவேல் ராஜ், தாமஸ், கனி ஆகிய பேராசிரியர்கள் வீட்டில் புதியவையாக வந்துள்ள பொருளாதார நூல்கள் போன்றவற்றைத்தான் கண்டிருந்தாள். இங்கோ எல்லாமே கோவிந்த நாம சங்கீர்த்தனமாகவே இருந்தன. வேஷ்டி தைத்துக் கொண்டிருந்த கிழவரின் புத்தகங்களாக இருக்கலாம் என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள் அவள்.

பத்து நிமிஷங்கள் ஆயின.

“என்ன காரியமாக வந்தாய் அம்மா?” குரலைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தவளுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. வேஷ்டி தைத்துக் கொண்டிருந்த அதே கிழவர் தாம் இப்போது ஒரு கதர் அரைக் கைப் பனியனோடு மீண்டும் எதிரே வந்து உட்கார்ந்திருந்தார்.

“புரொபஸரைப் பார்க்க முடியுமா?” என்று ஆங்கிலத்திலேயே மீண்டும் கேட்டாள்.

“நான்தான் அம்மா! வந்த காரியத்தைச் சொல்லு!” கிழவர் சிரித்துக் கொண்டே இதைக் கூறினார்.

தான் ஆங்கிலத்திலேயே பேச, அவர் தமிழிலேயே பதில் சொல்வது அவளுக்கு உறைத்தது. மறுபடி ஆங்கிலத்தில் தொடங்கி, உதட்டைக் கடித்துக் கொண்டு நடுவே ‘ஸாரி ஸார்’ போட்டு ஆங்கிலத்தை முறித்து, மீண்டும் தமிழில் பேச முயன்றாள் அவள்.

“என் பெயர் சுகுணா. முதல் வகுப்பில் டிஸ்டிங்ஷனோட போஸ்ட் கிராஜுவேட் ரிஸர்ச்சுக்கு ஒரு ‘கெய்டு’க்காக அலையறேன். நீங்கதான் பெரிய மனசு பண்ணணும்.”

“எந்த வருஷம் எம்.ஏ. முடிச்சே? எந்தக் காலேஜ்?”

வருஷத்தையும், படித்த காலேஜின் பெயரையும் கூறினாள் அவள்.

“வம்பு தும்புக்குப் பெயர் போன காலேஜ் ஆச்சே அது?”

அவள் இதற்குப் பதில் சொல்லவில்லை. 

“அந்தக் காலேஜிலே பசங்க படிக்கிறதை விடப் போராடறத்துக்கும், ஊர்வலம் போறதுக்குமே வருஷம் பூராச் செலவழிஞ்சு போயிடுமே!”

இதற்கும் அவள் பதிலே கூறவில்லை.

“உங்களுக்கு எல்லாம் யாரு புரொபஸரா இருந்தா?”

“கண்ணபிரான் ஸார்தான் புரொபஸர்.”