பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/486

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1108

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“அவன் நல்ல படிப்பாளி, பாவம்! அந்தக் காலேஜிலே போய் மாட்டிக் கொண்டான்.”

இதற்கும் அவள் பதில் எதுவும் கூறவில்லை.

“என்கிட்டக் கட்டுப்பாடு பார்க்கிற குணம் அதிகம். நீயோ ‘கட்டுப்பாடு கிலோ என்ன விலை?’ என்று கேட்கிற காலேஜிலே படிச்சு வந்திருக்கே. ஒரு வருஷத்திலே ‘மெத்தடாலஜி’ முடிக்கணும். அப்புறம் நிறைய ‘லைப்ரரி ரெஃபரன்’ஸுக்கு அலையணும், சிரமப்பட்டு உழைச்சுப் படிக்கணும். இதுக்கெல்லாம் சம்மதமானால் சொல்லு. இப்பவே உனக்குக் ‘கெய்டா’ இருக்கச் சம்மதிச்சு யூனிவர்ஸிடி ஃபாரத்துலே கையெழுத்துப் போட்டுத் தரேன்.”

“நீங்க சொல்றபடி கேக்கறேன். ஸார்”

“ரிஜிஸ்டிரேஷன் ஃபாரம் இருக்கா? கொண்டு வந்திருக்கிறாயா?”

அவள் அடக்க ஒடுக்கத்தோடு கைப்பையைத் திறந்து ஃபாரத்தைத் தேடி எடுத்து, அவரிடம் அளித்தாள்.

அவர், “ஸ்ரீமதே ராமாநுஜாய நம.” என்று கூறிக் கண்களை மூடி ஒரு நிமிஷம் தியானிப்பது போல் செய்து விட்டு, அவளுடைய பி.எச்.டி ரிஜிஸ்திரேஷன் பாரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். அவள் சாதி சமய கோத்திர விசாரணையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவர் இறங்கவில்லை.

‘மூன்றாவது உலக நாடுகளின் வளமும் பொருளாதார வளர்ச்சியும்’ என்று அவள் கொடுத்திருந்த ஆராய்ச்சித் தலைப்புத் தொடர்பாக, நடுவே அவர் இரண்டு வாக்கியங்கள் ஆங்கிலத்தில் பேசிய போது அவரது அந்த ஆங்கில உச்சரிப்பும், கம்பீரமும் அவளை மெய் சிலிர்க்கச் செய்தன. ‘இவ்வளவு பிரமாதமாக ஆங்கிலம் பேசக்கூடிய இவரா இதுவரை தமிழிலேயே பேசினார்?’ என்றெண்ணி வியந்தாள் சுகுணா.

“ரிஸோர்ஸஸ் அண்ட் டெவலப்மெண்ட் ஆஃப் த தேர்ட் வோர்ல்ட் கண்ட்ரீஸ் என்கிற தலைப்பை இன்னும் சுருங்கிய எல்லைக்குக் கொண்டு வர வேண்டும்” என்று அவரே யோசனையும் கூறினார்.

“நீ நாளைக்குக் காலையில் காலேஜுக்கு வா. பிரின்ஸிபாலிடமும் ஒரு கையெழுத்து வாங்கிக்கணும். அப்புறம் ஃபாரத்தை யூனிவர்ஸிடிக்கு அனுப்பணும், அதுக்கு முன்னாலே தலைப்பைப் பத்தி நாம் விவாதிச்சு முடிவு பண்ணிக்கலாம்.”

“சரி ஸார், நாளைக்கு வரேன்”அவரை வணங்கி விட்டு,மீண்டும் நன்றி கூறிய பின், புறப்பட்டாள் சுகுணா.

கம்பீரமான ஆங்கிலேயரின் உடையில், தமிழ்நாட்டு மனத்தோடு கூடிய குறுகிய உள்ளம் படைத்த பல பேராசிரியர்களையே நேற்று வரை அவள் சந்தித்து ஏமாந்து போயிருந்தாள். அவர்கள் தாராளமாக ஆங்கிலம் பேசி விட்டுக் காரியத்தில் மட்டும்