பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/489

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : ராஜ தந்திரிகள்

1111

இருவருடைய நலனுக்காகவும், இருவருடைய குடும்பங்களின் நலனுக்காகவும் குடிப்பதற்காக ‘சீர்ஸ்’ சொல்லிக் கொண்டாயிற்று. ஆரம்ப உபசாரங்கள் முடிந்தன.

முதல் ரவுண்ட் முடிகிறவரை லேடஸ்ட் ப்ளூ பிலிம் - நாட்டில் எந்தப் பெண்ணுடைய ‘அங்க அசைவுகள்’ அழகியவை. எந்த ஸெண்ட் ரொம்ப வாசனை என்று இப்படி இருந்தது பேச்சு. வேறு திசையில் திரும்பவே இல்லை, திரும்ப மறுத்தது, சண்டித்தனம் பண்ணியது.

இரண்டாவது ரவுண்டில் நியூகிளியர் சயின்ஸில் நோபல் பரிசு பெற்ற நபரைப் பற்றி மெல்லப் பிரஸ்தாபித்து நிறுத்தினார் இவர். அப்படியே அந்தச் சிறு நூலேணியில் ஏறி ‘நியூகிளியர் அம்பர்லா’ வரையில் போய் விடலாம் என்பது இவரது நோக்கமாயிருந்தது.

அவரும் விடவில்லை. சுதாரித்தார்.”யு நோ.பேஸிகலி ஐயாம் எ லிட்டரரி மேன். ஐ யாம் நாட் இன்ட்ரஸ்டட் இன் ஸயின்ஸ்”

“மே பி. பட் நெள எ டேய்ஸ் ஸயின்ஸ் டிசைட்ஸ் எவ்வரிதிங்.”

“டிட் யூ ரீட் ஜான் கீமென்ஸ் லேடஸ்ட் புக் ஆன் எக்ஸிஸ்டென்ஷியலிஸம்?”

இதற்குப் பதில் சொல்லாமல் டேபிளில் இருந்த சீஸ் கட்டிகளில் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு, “நீங்கள் டேனிஷ் சீஸ் சாப்பிட்டிருக்கிறீர்களா? சீஸ் என்றால் அதைத்தான் சொல்ல வேண்டும்” என்றார் அவர்,

“எனக்கு சீஸ் அதிகம் பிடிக்காதே, நான் எப்படி இதற்குப்பதில் சொல்ல முடியும்?”

இரண்டாவது பாட்டில் திறக்கப்பட்டது. இவருடைய முயற்சிக்கான நுனி கூட இன்னும் இவருக்குக் கிடைக்கவில்லை.

மாலையில் கடற்கரை பீச் அம்பர்லாவின் கீழ் இருவரும் அமர்ந்திருந்தனர். இவர் நம்பிக்கை இழக்காமல் மீண்டும் ஆரம்பித்தார்.

“இப்போது நாம் இருவரும் சேர்ந்து அமர்ந்திருக்க இந்தக் குடை பயன்படுவது போல் நாடுகள் சேர்ந்து பாதுகாப்பாக அமரவும் ‘குடை ஏற்பாடு’ தேவைப்படலாம் அல்லவா?”

அவர் இதற்குப் பதிலே சொல்லவில்லை. ஓரிரு நிமிஷ இடைவெளிக்குப் பின், “ஆப்பிள் உற்பத்தி மிகுதியால் மலை மலையாகக் குவிந்து போயிற்றாம். மார்க்கெட்டில் விலை குறையாமலிருக்க - அப்படிக் குவிந்த ஆப்பிள் மலைகளைக் கடலில் கொண்டு போய்த் தள்ளிச் சமாளிக்கிறார்களாம்!” என்று வேறு எதையோ ஆரம்பித்தார் அவர்.

“அணு ஆயுத ஏற்பாடுகளையும், அணு ஆயுதம் மூலமான தற்காப்புத் தேடலையும் உலகிலிருந்து ஒழித்தாலொழிய, நாடுகள் சமாதானமாகவும் பயமின்றியும் வாழ முடியாது” என்றார் அவர்.