பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————————

இரண்டாம் தொகுதி/கார்த்திகைச் சொக்கப்பனை 🞸 671

வயது விடலைப் பையனின் கையில் பெருமாளின் விலை மதிப்பற்ற தங்கப்பதக்கம் மின்னியது.

இந்த மாதிரிக் காரியங்களுக்கெல்லாம் இரத்தினப் பத்தர்தான் சரியான ஆள்! காதும் காதும் வைத்தாற்போலக் கொடுக்கிற சாமானை வாங்கிக் கொண்டு பணத்தை எண்ணிக் கீழே வைத்துவிடுவார். அவரிடம்தான் இதைக்கொண்டு போகவேண்டும் என்று தனக்குள் மெதுவாகச் சொல்லிக்கொண்டு, அதைக் கைக்குட்டையில் சுற்றிச் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டான் நாகலிங்கம்.

சிறிது நேரம் கழித்து அவன் இரத்தினப் பத்தரைக் காண்பதற்குப் புறப்பட்டபோது,“அடேநாகு இன்றைக்கு நீ வெளியிலே எங்கேயும் போக முடியாது. திருக்கார்த்திகை வேலை சுமந்து கிடக்கிறது. ஆறு மணிவரை இரண்டு பேருமாகச் சேர்ந்து வேலை செய்தால்தான் அத்தனை மாலைகளையும் கட்டி முடிக்கலாம். அப்புறம் எங்கே வேண்டுமானாலும் போ” என்றான் காயாம்பூ.

“சும்மா இந்தப் பக்கத்துத் தெருவரையில் போய்விட்டு ஒரு நொடியில் திரும்பி விடுகிறேன் அப்பா” என்று தட்டிக் கழித்துவிட்டுக் கிளம்பப் பார்த்தான் பையன். “அதெல்லாம் முடியாது. என்ன காரியமானாலும் ஆறு மணிக்கு மேலே வைத்துக் கொள். வருடத்திற்கு ஒரு நாள். சாமி காரியம்! அதைக் குறைவு வராமல் செய்துவிட வேண்டும்” என்று பையனை வற்புறுத்தி, உட்கார வைத்துவிட்டான் காயாம்பூ.

கோவிலில் முக்கியமான ஒரு பெரிய திருநாளுக்கு வேண்டிய மாலை, உதிரிச்சரம், செண்டு இவ்வளவும் முடிப்பதென்றால், இலேசுப்பட்ட காரியமா? நாகலிங்கம் ஆறேகால் மணிக்குத்தான் நந்தவனத்திலிருந்து கிளம்ப முடிந்தது. காயாம்பூ இரண்டாந்தடவை நீராடி மடியாக ஈர வேஷ்டியுடன் மாலைகளும், சரங்களும் நிறைந்த பூக்குடலைகளோடு கோவிலுக்குப் புறப்பட்டான். அன்றைக்குக் கோவில் மரியாதையைப் பெற்றுக்கொண்டு சொக்கப்பனை கொளுத்தவேண்டிய கடமையும் அவனுக்கு இருந்ததே!

நாகலிங்கம் இரத்தினப் பத்தரைச் சந்திக்கும்போது ஆறேமுக்கால் மணி. அவர் அவசர அவசரமாக நகைப்பட்டறையை மூடிவிட்டு, எங்கோ கிளம்புவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்.

“வா அப்பா நாகலிங்கம் என்ன சங்கதி?” என்று அவனை வரவேற்றார் இரத்தினப் பத்தர்.

“சும்மா! இப்படி உங்களைத்தான் பார்த்துவிட்டு வரச் சொல்லி அப்பா அனுப்பினார்” என்று பொய்யைக் கலந்தான் நாகலிங்கம். பத்தரிடத்தில் தன் தகப்பனார் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளாமல், தானாக எதையும் சாதித்துக் கொள்ள முடியாதென்று அவனுக்குத் தெரியும்.

“என்ன காரியம்? இப்படிவாயேன்” என்று பட்டறைக்குள் ஒதுக்குப்புறமான ஒரு இடத்துக்கு அவனைக் கூட்டிக்கொண்டு போனார் பத்தர். நகை ஈட்டின்பேரில் வட்டிக்குக் கடன் கொடுக்கும் லேவாதேவித் தொழிலையும் பத்தர் செய்து வந்தார்.