பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/491

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : ராஜ தந்திரிகள்

1113

இவருக்குத் தெரிய வேண்டியது தெரியவில்லை. அவர் தெரிவிக்க விரும்பாததைத் தெரிவிக்க நேரவே இல்லை.

அன்று மாலையில் இருவருமே ஹெட் குவாட்டர்ஸுக்குத் திரும்பி ஆக வேண்டும். மறுநாள் இருவரது தூதரகங்களுக்கும் வாரத்தின் முதல் வேலை நாள். அவரவர் தலைமை அகங்களிலிருந்தும் ‘டிப்ளமேடிக் பேக்’ கனமாக வந்து குவிந்திருக்கும்.

லக்சுரி சூட்டுக்கும், பீச் ரெஸ்டாரெண்டுக்கும் பில் ஸெட்டில் பண்ண வேண்டிய நேரம் வந்தது. இவர் கிட்டத்தட்ட ஆறாயிரம் டாலர் கொடுத்துக் கணக்குத் தீர்த்தார். அவர் இவருக்குச் சம்பிரதாயமாக நன்றி கூறி விட்டு அடுத்த ‘வீக் எண்ட்’டிற்குத் தம் பங்காக எழுபது மைல் தொலைவிலுள்ள ஒரு ஹில் ஸ்டேஷனுக்கு அழைப்பு விடுத்தார். இவர் ஒப்புக் கொண்டார். ஒப்புக் கொள்ளாமல் தவிர்க்க முடியாது. மரியாதையில்லை.

அந்த வாரம் நிமிஷமாக ஓடி விட்டது. ‘வீக் எண்ட்’டும் வந்தது. ‘எமரால்ட் ஹில்ஸ்’ ட்ரிப் ஆரம்பமாயிற்று. வழக்கம் போல் இருவர் நலனுக்காகவும் டோஸ்ட் கூறி, இருவரும் சியர்ஸ் பரிமாறிச் சிரிப்புகளையும் பரிமாறிக் கொண்டு பேச ஆரம்பித்தால் பேச்சு கார்டனிங், பாட்னி, ஃப்ளோரா அண்ட்ஃபெளனா ஆகியவற்றைச் சுற்றிச் சுற்றியே வந்தது. இருவரும் அந்த மலை நகரின் கதகதப்பான ஸெண்ட்ரல் ஹீட்டிங் உள்ள அறையில் மரம் செடி கொடிகள், பூக்கள் ஆகியவற்றில் சிக்கித் திணறினார்கள். இரண்டாவது ரவுண்ட் டிரிங்ஸ் கூட உருப்படியான ‘உளவு’ விவகாரத்தைத் தரவில்லை. கிரீக் மித்தாலஜி, அக்ரோ போலிஸ் ஆகியவற்றைப் பற்றியே பேச்சு வளர்ந்தது.

மூன்றாவது ‘ரவுண்டில்’ ஸ்காட்ச் விஸ்கியின் விசேஷ குணம் ஓட்காவுக்கு வருமா இல்லையா என்பது பற்றிய விவாதத்திலேயே சுகமாகக் கழிந்து விட்டது.

ஏழாயிரத்து முந்நூறு டாலர் ஐம்பது செண்ட்ஸுக்குப் பில் வந்தது. அவர் முகமலர்ச்சியோடு கொடுத்தார். இவர் நன்றி கூறி விட்டு அடுத்த ‘ஹோஸ்ட்’ ஆகத் தாம் இருக்கப் போவதை அறிவித்து, இடமும் குறிப்பிட்டார். அவரும் முகமலர்ச்சியோடு ஒப்புக் கொண்டர். ‘அம்பர்லா’ பற்றி மட்டும் ஒரு சிறு நுனி கூடப் புலப்படவில்லை. இரு ஏழை நாடுகளின் சிக்கனமான அந்நியச் செலாவணியில் இன்னும் எவ்வளவு ஆயிரம் இரகசியத்தை அறியவும் அறிய விடாமல் காக்கவும் செலவிட வேண்டுமோ தெரியவில்லை.

“விண்டர் கண்டின்யூஸ் - ஸம்மர் எலோன் கேன் பிரேக் த ஐஸ்” என்ற கோட் வேர்ட் டெலக்ஸைத் தலைமை அகத்துக்கு அனுப்பிவிட்டு, அடுத்த வீக் எண்ட்டை எதிர்பார்த்தார் அவர்.

(தீபம், தீபாவளி மலர், 1983)