பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/493

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : ஒரு நட்சத்திரத்தின் தோல்வி

1115

தன்னை விட இரண்டெரு வயது கூடவா, குறையவா என்பதை விஜயநளினியால் அனுமானிக்க முடியாமல் இருந்தது. அவன் அவளைப் பொறுத்த வரை ஒரு புதிராகவே தோன்றினான்.

‘இந்த வயதிலேயே இத்தனை மண்டைக் கனமா?’ என்று வியப்பாயிருந்தது அவளுக்கு. ஒரு பக்கம் அது கர்வத்தின் விளைவு என்று தோன்றினாலும், மறு பக்கம் ‘செட்டில்’ தன்னிடமோ, மற்றவர்களிடமோ அவன் ஒரு போதும் ஒரு சிறிதும் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதில்லை என்பதும் நினைவு வந்தது. நல்லவன், ஆனால், ஜம்பக்காரன் போலும்.

பின் ஏன் அவன் தன்னைப் பொருட்படுத்தவில்லை? சாதாரன முகதாட்சண்யத்திற்காகக் கூட அவன் ஏன் சிரிக்கவில்லை? எல்லாருடைய மரியாதைக்கும், பயபக்திக்கும் உரிய தான் சொல்கிற ஓர் நகைச்சுவையைச் சபை நாகரிகம் கருதியாவது அவன் ஏன் ரசித்திருக்கக் கூடாது? ரசிக்கவே முடியா விட்டாலும், ரசிப்பதாக ஏன் நடித்திருக்கக் கூடாது.

வாழ்க்கை வசதிகளையும், முகதாட்சண்யத்தையும் கருதி எத்தனை பேர் எத்தனை பிடிக்காத விஷயங்களை விரும்புவதாகவும், ரசிப்பதாகவும் நடிக்கிறார்கள்? அவனும் அப்படி ஏன் சமாளித்திருக்கக் கூடாது? ஏன் சமாளிக்கவில்லை?

மிகவும் புகழ்பெற்ற-செல்வாக்கு நிறைந்த தன்னுடைய கோபத்துக்கு ஆளானால், பார்த்துக் கொண்டிருக்கிற வேலையை இழந்து தவிக்க நேரிடுமே என்கிற தற்காப்பு உணர்ச்சி கூட அவனுக்கு ஏன் இல்லை? அவளைப் பொறுத்த வரை அந்த அழகிய முகத்தில் சிரிப்பற்ற-சீரியஸான இளைஞன் ஓர் ஆச்சரியமாகிப் போனான்.

தனியாக புரொடக்‌ஷன் மானேஜரிடம் விசாரித்தாள் அவள். அவ்வளவு பெரிய நட்சத்திரம், ஸ்கிரிப்ட் அஸிஸ்டெண்டாகச் சேர்ந்திருக்கும் அந்தப் புதிய பையனைப் பற்றி விசாரித்த போது, புரொடக்‌ஷன் மானேஜர் பதறிப் போனான்.

“ஏன் கேட்கிறீங்க மேடம்? அவன் உங்க கிட்ட ஏதாவது தப்பா நடந்துகிட்டானா?”

“நோ…நோ…அப்பிடியெல்லாம் ஒண்ணுமில்லே... ரொம்ப ‘ரிஸர்வ்ட் டைப்’ போல இருக்கு… எப்பவும் மூஞ்சியை ‘உம்’னு வச்சுக்கிட்டு...”

“பெரிய படிப்பாளி… ரொம்ப விஷயம் தெரிஞ்ச பையன்... வேற வேலை கிடைக்காததாலே, நம்ம வசனகர்த்தா சாரிட்ட அஸிடெண்டா சேர்ந்திருக்கான். கொஞ்ச நாள் எங்கியோ காலேஜ்லே புரொபஸாராக் கூட இருந்தான். பழகத் தெரியாததுனாலேதான் அங்கேயும் தகராறு. சூதுவாது, கள்ளங் கபடமில்லாமே – ஒளிவு மறைவு தெரியாம-மனசுலே பட்டதைப் பட்டுன்னு சொல்லிடறவங்க…எப்படி மேடம் முன்னுக்கு வர முடியும்?”

“அவர் பேரு. என்ன?”{nop}}