பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/494

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1116

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

அந்தப் பையனை மேடம் ‘அவர்’ போட்டு அழைத்தது புரொடக்‌ஷன் மானேஜருக்கு வியப்பை அளித்திருக்க வேண்டும்.

“நீங்க ‘அவன்’னே சொல்லுங்க மேடம், உங்க அனுபவத்துக்கும், ஃபீல்டு எக்ஸ்பீரியன்சுக்கும் முன்னாடி. அவன் பேரு அழகிய நம்பி. இங்கே எல்லாரும் ‘நம்பி’ன்னு கூப்பிடுவோம். வேற ஏதாவது…”

“ஒண்ணுமில்லே. சும்மாத்தான் விசாரிச்சேன். அந்த ஆளு ஒரு மாதிரி எப்பவும் “மொரோஸா' இருக்கிறதைப் பார்த்து யாருன்னு விசாரிக்கத் தோணிச்சு…”

“ஏதாச்சும் தப்புத் தண்டாவா நடந்துக்கிட்டா உடனே சொல்லுங்க... கணக்குத் தீர்த்து வீட்டுக்கு அனுப்பிச்சுடலாம் மேடம்!”

இது நடந்து நாலைந்து தினங்களுக்குப் பின், கோவளத்தில் ஓர் அவுட்டோர் ஷூட்டிங்கில் இடைவேளை லஞ்ச் டயத்தின் போதும், முன்பு நடந்தது போலவே ஒரு சம்பவம் நடந்தது. விஜயநளினிக்கு வீட்டிலிருந்து சுடச்சுட, மணக்க மணக்கப் பகலுணவு கேரியரில் வந்திருந்தது.

அதில் எல்லா முக்கிய அயிட்டங்களையும் சிக்கன் ரோஸ்ட் உட்பட ஒரு பிளேட்டில் எடுத்து வைத்து, அவளேஅந்த ஸ்கிரிப்ட் அஸிஸ்டெண்ட் நம்பியைக் கூப்பிட்டு, “எடுத்துக்குங்க ப்ளீஸ்..” என்று புன்முறுவலோடு வேண்டினாள்.

கெஞ்சாத குறையாக இருந்தது அவளுடைய குரல். ஆனால், அவன், தான் கையோடு கொண்டு வந்திருந்த அலுமினியம் டிபன் டப்பாவைக் காண்பித்து, ‘நோ, தேங்க்ஸ், நான் கொண்டு வந்திருக்கேன்” என்று மறுத்து விட்டான்.

அவள் அப்படித் தனக்கு வந்த சாப்பாட்டை தங்களுக்கு, அவள் கையாலேயே பகிர்ந்து கொடுக்க மாட்டாளா என்று தயாரிப்பாளரும் - டைரக்டரும் கூட ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தார்கள். அவனோ மறுத்துவிட்டான்!

“மேடம்! அவனுக்குக் குடுத்து வைக்கலே. இங்கே குடுங்க! நான் காத்துக்கிட்டிருக்கேன்.” என்று டைரக்டர் அந்தப் பிளேட்டைப் பவ்யமாகக் கை நீட்டி வாங்கிக் கொண்டு, அவள் அருகே அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். அயிட்டங்களின் ருசியைப் பற்றிப் புகழ் மாலை சூட்டிய வண்ணமே உண்டு முடித்தார்.

அப்படிச் சாப்பிடும் போதும், சாப்பிட்டு முடித்த பின்பும் விஜயநளினி உதிர்த்த ஜோக்குகளுக்காக எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அந்தச் சிரிப்பு வெள்ளத்தில் அவன் மட்டும் ஒரு தனித் தீவாக அசையாமல் இருந்தான். தனியே பக்கத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்து தீவிரமாக ஸ்கிரிப்டுகளை என்னவோ செய்து கொண்டிருந்தான்.

அவன் எங்கே, என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதில் தவறாமல் ஒரு கண் வைத்திருந்த விஜயநளினி அந்தப் பக்கம் கையை நீட்டி, வசனகர்த்தாவிடம் “உங்க அஸிஸ்டெண்ட்டுக்குக் காது கேட்குமா இல்லையா?” என்று குத்தலாக வினவினாள்.