பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/495

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : ஒரு நட்சத்திரத்தின் தோல்வி

1117

“காதெல்லாம் நல்லாக் கேடகும்! அதுலே ஒண்ணும் கோளாறு இல்லே. ஆள்தான் ஒரு மாதிரி ரிஸர்வ்ட் டைப். கலகலன்னு பழக மாட்டான். மெத்தப் படிச்ச மேதாவிகள்ளாம் அப்படித்தான் இருப்பாங்க போலிருக்கு!”

என்று வசனகர்த்தா, விஜயநளினிக்குச் சொல்லிய பதில் உட்பட எல்லாமே அவன் காதில் தெளிவாக விழுந்தும், அவன் அவர்களை, அவற்றைப்பொருட்படுத்தியதாகவே காட்டிக் கொள்ளவில்லை.

ஆனால், அவள் மனத்திலே அவன் தான் இருந்தான். சுற்றி அருகிலமர்ந்து பேசிச் சிரித்துக் கொண்டிருந்த யாரும் அவளைப் பாதிக்கவே இல்லை. பேசாமலும், சிரிக்காமலும் ஒதுங்கியிருந்த அவன்தான் அவளைப் பாதித்து, ஏங்க வைத்திருந்தான். எரிச்சல் எரிச்சலாக வந்தது அவளுக்கு புரொடக்‌ஷன் மானேஜரிடம் சொல்லி ஒரே நிமிஷத்தில் அந்தத் திமிர் பிடித்தவனை வேலையிலிருந்து துரத்தி விட அவளால் முடியும். ஆனால், அதைச் செய்ய அவள் மனம் ஒப்பவில்லை. அந்த அழகிய இளைஞனை அவள் அழிக்க விரும்பவில்லை. ஜெயிக்கவே விரும்பினாள்.

ஒன்றை அழிப்பது வேறு; ஜெயிப்பது வேறு. அவனை ஜெயிப்பதிலுள்ள சந்தோஷம் அழிப்பதில் கிடைக்க முடியாது. ஒரு சிங்கத்தை அதற்குத் தெரியாமல் மறைந்திருந்து சுட்டு வீழ்த்தி அழிப்பதை விட உயிரோடு பிடித்துக் கூண்டிலடைத்து ஜெயிப்பதும், ‘இதை நான்தான் ஜெயித்தேன்’ என்று பலரறியப் பெருமிதப்படுவதுமே அதிக மரியாதைக்குரியவை. அவள் அந்த இளஞ்சிங்கத்தை அழிக்க விரும்புவதற்குப் பதில் ஜெயிக்கவே விரும்பினாள்.

செளந்தரிய தேவதை போல் தான் ஒருத்தி அங்கு இருப்பதை உடனிருக்கும் அத்தனை பேரும் உணர்ந்து, ஒப்புக்கொண்டு, மதித்துப் பயந்து பதறிக் கொண்டிருக்கும்போது அவன் ஒருத்தன் மட்டும் அதை உணராமலும், ஏற்காமலும், பயப்படாமலும், பதறாமலும் பணியாமலும் இருந்தது அவளை என்னவோ செய்தது. அவள் வேறு எதைப் பற்றியும், யாரைப் பற்றியுமே நினைக்காமல் அதைப் பற்றியும் - அவனைப் பற்றியுமே நினைத்துத் தவித்தாள். எவ்வளவோ முயன்றும், அவளால் அவனை மறக்க முடியவில்லை. மறக்க முயன்றாலும், அவன்தான் நினைவுக்கு வந்தான். அவனைத் தவிர வேறெதுவுமே நினைவில் இல்லை.

இரண்டு மூன்று நாட்கள் கழித்து, ஓர் இன்டோர் ஷூட்டிங்கிற்காக, மேக்-அப் அனெக்ஸிலிருந்து, செட்டுக்குள் நுழையும் குறுகலான இடைவழியில் அவள் அவனை நேருக்கு நேர் சந்தித்தாள். தற்செயலாக நேர்ந்த தவிர்க்க முடியாத அந்தச் சந்திப்பின் போது அவளும் தனியாயிருந்தாள், அவனும் தனியாயிருந்தான்.

அவனை ஜெயித்து மடக்கிப் போட இதுதான் சரியான சமயம் என்று அவளுக்குத் தோன்றியது. கொஞ்சம் துணிந்தே செயல்பட்டாள் அவள். கருந்திராட்சைக் குலைகளாகச் சுருண்டு மின்னிய அவன் தலையில் வலது கரத்தைக் கொடுத்து அளைந்தபடி,”மிஸ்டர் நம்பி! உங்களுக்கு என்மேல் என்ன கோபம்?” என்று இதமான, கனிவான குரலில் கேட்டாள்.