பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/496

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1118

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

அவளது அழகிய சண்பகப் பூ விரல்களைத் தன் தலையிலிருந்து விலக்கியபடி, “மிஸ் விஜயநளினி! இதெல்லாம் என்ன…? யாராவது பார்த்தால் தப்பாக நினைக்கப் போகிறார்கள்?' என்று கடிந்து கொள்கிற குரலில் அவளைக் கேட்டான் அவன்.

“சொன்னால் தான் விடுவேன். சொல்லுங்க... என் மேல் உங்களுக்கு என்ன கோபம்?”

“எனக்கா? உங்க மேலேயா..? இதென்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி? உங்க மேலே கோபப்பட நான் யார்?”

“பின்னே ஏன் சிரிக்க மாட்டேங்கிறீங்க…?”

“நான் காரணமில்லாமச் சிரிக்கிறதில்லே... மத்தவங்க சிரிக்கிறப்ப ஒப்புக்காகக் கூடச் சேர்ந்து சிரிக்கிற வழக்கமும் எங்கிட்டக் கிடையாது. அதை நீங்க தப்பா புரிஞ்சிக்கக் கூடாது…”

“என்னோட ஜோக் அவ்வளவு சுமாராவா இருக்கு?”

“உங்க ஜோக் மத்தவங்களுக்குப் பிரமாதமாகவே இருக்கலாம்…”

“உங்களுக்கு?”

“எனக்கா…? ஐயாம் நாட் ஸோ சீப்…” என்று சொல்லத் தொடங்கி, வாக்கியத்தை முடிக்காமல் பாதியிலேயே நிறுத்தினான் அவன்.

“மத்தவங்க அத்தனை பேரும் சிரிக்கிறதும், பாராட்டறதும் எனக்குப் பெரிசா படலே. நீங்க சிரிக்காததும், பாரட்டாததும் தான் பெரிசா மனசை உறுத்துது…”

“இஸ் இட்…? ஐயாம் ஸோ ஸாரி மிஸ் விஜயநளினி!” மற்றவர்களைப் போல் அவன் செயற்கையான மரியாதையை அளித்துத் தன்னை ‘மேடம்’ என்று கூப்பிடாமல், பேரைச் சொல்லியே கூப்பிட்டது, அப்போது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

படப்பிடிப்பிற்காக மேக்-அப் அனெக்ஸிலிருந்து, அவள் செட்டுக்குள் நுழைந்தாள். சிறிது நேரத்தில் அவனும் அதே செட்டுக்குள் ஸ்கிரிப்ட் கத்தைகளுடன் வந்தான். .

படப்பிடிப்பு நிற்காமல் தொடர்ந்து பகல் ஒரு மணி வரை நடந்து கொண்டிருந்தது. சோக உணர்ச்சி நிறைந்த சில கட்டங்களை அன்று எடுக்க வேண்டியிருந்தது. விஜயநளினி பிரமாதமாக நடித்தாள். ஷாட் எல்லாம் கச்சிதமாக ஓ.கே. ஆயின.

செட்டில் இருந்தவர்கள் மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படும் வண்ணம் அற்புதமாகத் தன் திறனை வெளிப்படுத்தினாள் சூப்பர் ஸ்டார் விஜயநளினி. ஒன்றரை மணிக்கு மேல் பகல் உணவு இடைவேளைக்காக வழக்கம் போல் ஷூட்டிங் நின்றது. எல்லாரும் கும்பல் கும்பலாகச் சாப்பாட்டுக்குப் பிரிந்து போனார்கள்.