பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/497

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : ஒரு நட்சத்திரத்தின் தோல்வி

1119

விஜயநளினி, டைரக்டர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, அவரது உதவியாளனான நம்பி என்ற அந்த இளைஞன் ஆகியோர் மட்டும் எஞ்சினார்கள். தன்னுடைய டிபன் டப்பாவை எடுத்துக் கொண்டு வெளியே புறப்பட இருந்த நம்பியை அவள் கவனித்து விட்டாள்.

“மிஸ்டர் நம்பி! எங்கே கிளம்பிட்டீங்க...? சும்மா இங்கேயே உட்கார்ந்து சாப்பிடுங்க..”என்று அவனுக்காகத் தானே ஒரு மடக்கு நாற்காலியை எடுத்து விரித்துப் போட்டாள்.

ஏற்கனவே நொந்து போயிருக்கும் அவள் மனத்தை, மேலும் நோகச் செய்யக் கூடாது என்று கருதியோ என்னவோ, அவன் மறுக்காமல் அந்த நாற்காலியில் அமாந்தான்.

எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தயாரிப்பாளர், “சாப்பாட்டை விட உங்க ஜோக்ஸ் தான் ரொம்ப சுவையா இருக்கும். எங்கே...தொடங்குங்க. பார்க்கலாம்” என்று ஆரம்பித்தார்.

எல்லாரும் அதை ஒப்புக் கொண்டு வரவேற்பது போல் சிரித்தார்கள். அவள் ஓரக் கண்ணால் அவன் பக்கம் பார்த்தாள். அவன் சிரிக்கவில்லை.

வேண்டா வெறுப்பாகத் தட்டுத் தடுமாறி எதையோ சொல்லத் தொடங்கி, “மன்னிச்சுக்குங்க! ஜோக் எதுவும் வரலே…” என்று அவள் ஆற்றாமையோடு முடித்தாள்.

அதற்குப் பதிலாக தயாரிப்பாளர் ஏதோ ஜோக் அடித்தார். அதற்கு எல்லாரும் சிரித்தார்கள். அவளுக்குச் சிரிக்க வரவில்லை. அவன் சிரிக்கவில்லை.

“சோக நடிப்பினாலே மேடத்துக்கு இன்னிக்கு ‘மூட்’ அவுட்டாயிடிச்சு!” என்றார் தயாரிப்பாளர். சொல்லி விட்டு அவளைக் கேட்காமலே, பிற்பகல் ‘ஷெட்யூல்’களையும் ரத்துச் செய்தார். செட்டிலிருந்து காருக்குச் சென்ற போது அவள் அந்த இளைஞனின் அருகே சென்று மலர்ந்த முகத்தோடு ஒரு நாளுமில்லாத புது வழக்கமாகப் “போய் வருகிறேன்!” என்று சொல்லிக் கொண்டாள்.

அவனை அழிக்கவும் முடியாமல், ஜெயிக்கவும் இயலாமல், தானே அவனுக்குத் தோற்றுப் போயிருப்பதை இப்போது அவள் தனக்குத் தானே அந்தரங்கமாக உணர்ந்தாள்.

(இதயம் பேசுகிறது. தீபாவளி மலர், 1983)