பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/498

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

155. வசதியாக ஒரு வேலை

துபாயிலோ, குவைத்திலோ வேலை வாங்கித் தருவதாக மாத்யூ செய்திருந்த பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்துத்தான் அகல்யா அவனைச் சந்திக்கச் சென்றாள்.

நொடித்துத் தளர்ந்து, நோயில் விழுந்து விட்ட வயதான பெற்றோரையும், படித்துக் கொண்டிருந்த தம்பி தங்கைகளையும் காப்பாற்ற அவளுக்கு ஓர் உத்தியோகம் தேவைப்பட்டது. உத்தியோகமாக மட்டுமில்லை, கை நிறையப் பணம் சம்பாதிக்கிற உத்தியோகமாகத் தான் தேடினாள் அவள். ஆனால், குறைவாகச் சம்பாதிக்க முடிந்த வேலை கூடக் கிடைக்கிற வழியாயில்லை.

மாத்யூவை அவள் சந்தித்தது, தன்னுடைய அதிர்ஷ்டம் என்று அவனே நினைத்தான். முதலில் அவளும் அப்படித்தான் நினைக்க நேர்ந்தது.

வியாபாரத்தில் மகத்தான பேராசைகளும், அதற்குத் தேவையான திட்டங்களும் முனைப்பும் உள்ள நடுத்தர வயது மனிதனை நமக்குள் கற்பித்துப் பார்த்துக் கொண்டால் அவன்தான் ‘மாத்யூ’வாக இருப்பான். மாத்யூவின் நினைப்பிலும் அகராதியிலும் ‘சாத்தியமில்லை; முடியாது’ என்ற வார்த்தைகளே கிடையாது.

அவன் ஒருவனுடைய அகராதியில் மட்டுமில்லை. பணம் சம்பாதிக்க விரும்புகிற எவருடைய அகராதியிலும் அந்த வார்த்தைகள் இருக்க முடியாதுதான். மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதுதான் வியாபாரம்.

மாத்யூவோ சகலகலா வல்லவனாக இருந்தான். அரண்மனைக்காரன் தெருவாகி விட்ட அர்மேனியன் தெருவின் கட்டடம் ஒன்றின் மூன்றாவது மாடியில் ‘மாத்யூ டிராவல்ஸ்’ என்று போர்டு தொங்கினாலும், போர்டில் அறிவிக்கப்படாத வேறு பல லாபகரமான வியாபாரங்களையும் அவன் செய்தான். அவனுடைய நிறுவனத்தில் ஆண்களை விடப் பெண்கள் - அதுவும் இளம் பெண்கள் அதிக எண்ணிக்கையில் வேலை பார்த்தார்கள்.

அகல்யாவைப் பார்த்தவுடன் மாத்யூவுக்குப் பிடித்து விட்டது.

“துபாய் வேலை ஒன்றும் லட்டு மாதிரி உடனே கையில் கிடைத்து விடாது.அதற்கு நிறைய முன் பணம் செலவழிக்க வேண்டும். உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது. இங்கேயே வேண்டுமானால், ஒரு வேலை தருகிறேன்” என்று வார்த்தைகளையும் புன்னகையையும் சேர்த்து அவள் முன் வழங்கினான் மாத்யூ.

அகல்யா சம்மதித்தாள். அவளுக்கு மலையாளம், தமிழ்,ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகள் தெரிந்திருந்தது வசதியாகப் போயிற்று. அவளுடைய உயர்நிலைப் பள்ளிப்