பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/499

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : வசதியாக ஒரு வேலை

1121

படிப்புக் காலம் வரை அவர்கள் குடும்பமே பாலக்காட்டில்தான் இருந்தது. பின்புதான் சென்னைக்குப் பிழைப்பைத் தேடிக் குடியேறியது.

மாத்யூவைப் போன்ற கெட்டிக்கார வியாபாரிக்கு, இப்படி மூன்று மொழிகள் தெரிந்த பெண் எத்தனையோ விதங்களில் பயன்படக் கூடியவளாகவும் அவசியமாகவும் இருந்தாள்.

எப்படியோ மாதம் இருநூறு, முந்நூறு ரூபாய் கிடைக்கிற மாதிரி ஒரு வேலை கிடைத்தால் கூடப் போதும் என்று தேடி அலைந்தவளுக்கு, ‘முதலில் மாதம் ஐநூறு ரூபாய் தர முடியும்! அப்புறம் போகப் போக ஏதாவது பார்த்துச் செய்யலாம்’ என்று மாத்யூ கூறிய சொற்கள் அமிர்தமாகக் காதில் ஒலித்தன.

‘மாத்யூ டிராவல்ஸ்’ அலுவலகத்தில் ஏற்கனவே அகல்யாவின் வயதை ஒத்த வயதுடைய வேறு சில பெண்களும் வேலை பார்த்து வந்தார்கள். துணைக்கு இன்னும் இரண்டு மூன்று பெண்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்த போது அகல்யாவுக்கு ஆறுதலாக இருந்தது.


வீட்டில் அப்பளமும், சீடையும், முறுக்கும் தயாரித்துக் கடைகளுக்கும், ஸ்டால்களுக்கும் தேடிக் கொண்டு போய் விற்றுப் பிழைத்து வந்த குடும்பத்தில் ஒரு நபர் உத்தியோகத்துக்குப் போய் மாதச் சம்பளம் வாங்கப் போவதை எண்ணினால் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

“அகல்யாவுக்கு வசதியாக ஒரு வேலை கிடைச்சால்தான் நம்ம குடும்பம் தலை தூக்க முடியும்” என்று அடிக்கடி அவள் தந்தை பெருமூச்சுடனும், ஏக்கத்துடனும் கூறுவது உண்டு. அந்தப் பெருமூச்சுக்கும், ஏக்கத்துக்கும் இனி அவசியமில்லை. என்பதை நினைத்த போது ஒரு விநாடி அகல்யாவுக்கே நிம்மதியாயிருந்தது.

“இது மிஸ் அகல்யா. நாளையிலிருந்து இங்கே வேலைக்கு வரும். டெலக்ஸ் அனுப்பறது, ரெnவ் பண்றதெல்லாம் கத்துக் குடுக்கணும்” என்று மற்ற இரண்டு பெண்களிடம் மாத்யூ அவளை மலையாளத் தமிழில் அறிமுகப்படுத்திய போது, அவர்கள் சிரித்த ஒரு தினுசான சிரிப்பும், நடந்து கொண்ட தினுசும் அகல்யாவுக்கு என்னவோ போல் இருந்தன.

ஒரு வேளை தான் அவர்களை விட அழகாகவும், நிறமாகவும் இருப்பதால் அவர்கள் பொறாமை அப்படி வெளிப்பட்டிருக்கலாம் என்று அவளாகக் கற்பனை செய்து கொண்டாள்.

தன் வீட்டில் போய் அகல்யா இந்த விவரங்களைச் சொல்லிய போது, எல்லோருக்குமே திருப்தியாகத்தான் இருந்தது. சின்னஞ்சிறு குழந்தைகளை முறுக்குடனும், சீடையுடனும் கடற்கரைக்கும், கடை வீதிகளுக்கும் துரத்துவதை இனியாவது குறைத்துக் கொள்ள முடியும் என்று நினைத்து அந்த ஏழைக் குடும்பம் நிம்மதியடைந்தது.


நா.பா. II - 32