பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/500

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1122

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

மாத்யூ டிராவல்ஸில் வேலை பார்க்கச் சென்ற முதல் நாளே, அங்கிருந்த மற்றவர்கள் தன்னிடம் அவ்வளவு சுமுகமாகவும், கலகலப்பாகவும் பழகவில்லை என்பது அகல்யாவுக்கே புரிந்தது. பொறாமையா, அசூயையா. எது காரணம் என்பதும் தெரியவில்லை.

அவர்கள் அவளைச் சுட்டிக் காட்டித் தங்களுக்குள் கண்களைச் சிமிட்டி ஏதோ மெல்லிய தணிந்த குரலில் பேசிக் கொண்டார்கள். நமட்டுச் சிரிப்புச் சிரித்தார்கள். அகல்யாவின் குடும்ப வறுமையும், சிரமங்களும் இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமலும், கண்டு கொள்ளாமலும் இருக்க அவளுக்குக் கற்றுக் கொடுத்திருந்தன.

போகப் போகப் பல விவரங்கள் அகல்யாவுக்குப் புரிந்தன.

மாத்யூ டிராவல்ஸில் வாடிக்கைக்காரர்கள் பயணம் செய்ததை விட மாத்யூதான் அதிகமாகப் பிரயாணம் செய்தான். இன்று சிங்கப்பூர், நாளை ஹாங்காங், நாளன்றைக்கு பாங்காக், துபாய் என்று மாத்யூ மாதத்தில் முக்கால்வாசி நாட்கள் வெளியேதான் இருந்தான். வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளிலிருந்தும், பூடகமான டெலக்ஸ் செய்திகள் பறந்தன. டிக்கட்டுகள், விமானப் பயண ஏற்பாடுகள் மூலம் வந்த வருவாயை விடப் பல லட்சக்கணக்கில் வேறு வகை வருமானம் குவிந்தது.

கடத்தல், கொல்லைப்புற வழியில் மணி எக்ஸ்சேஞ்ஜ் என்று பல விவகாரங்கள் அங்கே காதும், காதும் வைத்தாற் போல் நடந்து கொண்டிருந்தன. சூதுவாதில்லாத ஏழைக் குடும்பம் ஒன்றின் அப்பாவிப் பெண்ணாகிய அகல்யா, கபடங்களையும், கள்ளங்களையும் புதிதாக மெல்ல, மெல்லக் கற்றுத் தேற வேண்டியிருந்தது. கலையாகப் பழக வேண்டியிருந்தது.

சில நாட்கள் காலை ஏழரை மணிக்கே வர வேண்டியிருந்தது.வேறு சில நாட்களில் வீடு திரும்பவே இரவு பத்து மணிக்கு மேல் ஆயிற்று. இரவு பத்தரை மணிக்கு மேல் சிட்னி, சிங்கப்பூர் மார்க்கமாகச் சென்னையில் இறங்கும் விமானத்தில் அவர்கள் எதிர்பார்க்கிற பிரயாணி அல்லது பிரயாணிகள் இருந்தால், மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கே போக வேண்டியிருக்கும்.

'மாத்யூ டிராவல்'ஸின் மர்மங்களும், உள் விவகாரங்களும், இரகசியங்களும் அவளுக்குப்புரியப் புரிய அவளது சம்பளத்தில் ஒவ்வொரு நூறாகக் கூடிக் கொண்டே போயிற்று. கம்பெனியில் அவள் தவிர்க்க முடியாதவள் ஆனாள்.

‘ஹண்ட்ரட் கோகனட்ஸ்’ - என்று தொடங்கி ‘நூறு தேங்காய்கள் அனுப்பவும்’ என ஒரு தந்தியோ, டெலக்ஸோ வந்தால் அந்தச் சொற்களின் அன்றைய அர்த்தம் என்ன என்பது மாத்யூவுக்கு அல்லது அகல்யாவுக்கு மட்டுமே தெரியும். நூறு தேங்காய்களைப் போலப் பல இரகசிய வாக்கியங்கள் இவர்கள் அனுப்பும் டெலக்ஸிலும், பெறும் டெலக்ஸிலும் சர்வ சகஜமாக அன்றாடம் புழங்கிக் கொண்டிருக்கும்.