பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/501

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : வசதியாக ஒரு வேலை

1123

டிராவல்ஸ் என்பது பெயருக்கு ஒரு முகமூடியாக அங்கீகரிக்கப்பட்ட பெயராக இருந்ததே ஒழிய, அங்கு லாபம் தருகிற சட்டவிரோதமான பல காரியங்கள் நடந்தன.

சிங்கப்பூரிலும், ஹாங்காங்கிலும் மாத்யூவுக்கு ஆட்களும், ஏற்பாடுகளும் உண்டு. இரண்டாயிரம் சிங்கப்பூர் டாலரை சிங்கப்பூரில் மாத்யூவின் ஆளிடம் இந்தியாவுக்குப் பயணம் செய்கிற ஒருவர் கொடுத்து விட்டால் அதன் அதிகாரப் பூர்வமான இந்திய மதிப்பை விடக் கூட ரூபாய்கள் உள்ள ஒரு தொகையை மாத்யூ டிராவல்ஸ் இங்கே அவருக்கு ரொக்கமாகக் கொடுத்து விடும். நம்பிக்கை அடிப்படையிலும், சில அடையாளக் குறியீடுகளை வைத்தும் இந்தச் சட்ட விரோதமான இரகசியப் பொருளாதாரப் பரிமாற்றம் நடைபெற்று வந்தது. மிக மிக அந்தரங்கமாக அதில் இந்திய ரூபாய்களை வாங்கிக் கொண்டு டாலர், ஸ்டெர்லிங் நோட்டுக்களைக் கூட விற்று வந்தார்கள்.

தேச விரோதமான அபாயகரமான இந்தக் காரியங்களைச் சாதாரணமானதொரு டிராவல் ஏஜென்ஸி என்ற முகமூடி அணிந்து செய்து வந்தான் மாத்யூ.

'ஆபத்தான இந்த வேலையை விட்டு விட வேண்டும். குறைந்த சம்பளம் கிடைத்தாலும், வம்பில்லாத ஒரு நல்ல வேலையைப் பார்க்க வேண்டும்” - என்று நடுநடுவே அகல்யாவுக்குத் தோன்றும். அம்மாதிரி மன நிலையையோ.. அதைப் பிரதிபலிக்கும் பேச்சையோ அவளிடம் கண்டால், உடனே சற்றும் தயங்காமல் அவள் சம்பளத்தில் நூறு ரூபாயை உயர்த்தினான் மாத்யூ.

ஒரு சில மாதங்களில் அவள் மாதச் சம்பளம் ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இம்மாதிரி வியாபார நிறுவனங்களில் பரஸ்பர நம்பிக்கையும், உள் இரகசியங்களைக் காப்பாற்றுவதுமே முக்கியத் தகுதி. அது ஆண்களை விடப் பெண்களிடம் அதிகமாக இருப்பதை மாத்யூ அனுபவத்தில் அறிந்திருந்தான். பெண்களிடம் ஒரு செளகரியம் இருந்தது. தங்கள் இரகசியங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் அதைக் காப்பாற்ற வேண்டிய பெண்களின் சில இரகசியங்களைத் தங்களோடு வைத்திருந்தால், பரஸ்பரம் இரு தரப்பு இரகசியங்களும் பிழைத்து விடும்.ஆண்களிடம் வேறு தொல்லை இருந்தது. கோவாவிலிருந்து 'டிஸௌஸா ‘என்றொரு வாலிபன் ஆரம்பத்தில் ‘மாத்யூ டிராவல்’ஸில் வேலை பார்த்தான். ஒரு வருடத்துக்குள் தொழில் இரகசியங்களை எல்லாம் புரிந்து கொண்டு, பக்கத்துப் பிராட்வேயில் ‘டிஸெளஸா டிராவல்ஸ்’ என்று ஆரம்பித்துப் பிரிந்து போய் விட்டான். இந்தக் கசப்பான அனுபவத்துக்குப் பின் மாத்யூ - பெண்களை மட்டுமே அதிக அளவில் வேலைக்குச் சேர்த்தான்; அதுவும் அதிக அள்வு பொருளாதார வசதியில்லாத ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை விவரமறிந்து வேலைக்குச் சேர்த்தான்.

பொதுவான பயமும், பண ஆசையும் - விசுவாசமும் இணைந்திருக்கும் நபர்களாகப் பொறுக்கி எடுத்துக் கூட வைத்துக் கொண்டான் மாத்யூ. டிஸெளஸா போன்றவர்களை மீண்டும் உள்ளே விட அவன் தயாராயில்லை.