பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/502

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1124

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

முதல் இரண்டு வருடங்கள் வரை எல்லாம் பிரமாதமாயிருந்தன. சம்பளத்தைத் தவிர திடீர், திடீரென்று வெளிநாட்டுக் கடிகாரம், நைலெக்ஸ் புடவை, துணிமணிகள், ஸெண்ட் என்று அகல்யா வீட்டில் கொண்டு வந்து குவித்தாள். தம்பி, தங்கைகள் கையில் எல்லாம் ‘டிஜிட்டல் வாட்ச்கள்’ டாலடித்தன. கைக்கடிகாரம் கட்டிக் கொண்டு பழக்கமே இல்லாத கர்நாடகமான அம்மா கையில் கூட வற்புறுத்தி ஒரு ‘டிஜிட்டல்’ கைக்கடிகாரத்தை மாட்டிவிட்டிருந்தாள் அகல்யா. இனி மேல் வீட்டில் கடிகாரம் கட்டுவதற்குக் கைகள் மீதமில்லை என்ற அளவுக்கு ஆகி விட்டது.

வேலை பார்ப்பவர்களின் நம்பிக்கையையும், விசுவாசத்தையும் அடைய மாத்யூ பல நல்ல காரியங்களைச் செய்தான். ஒவ்வொரு மாதமும் கடைசி வேலை நாளன்று சுளை சுளையாகச் சலவை நோட்டுக்களை எண்ணிச் சம்பளம் கொடுத்தான்.

அகல்யா அங்கு வேலைக்குச் சேர்ந்த மூன்றாவது வருடம், நான்காவது மாதமாகிய ஏப்ரல் மாதம் முப்பதாம் தேதி அன்று காலை 10 மணிக்கே வழக்கம் போல் மாத்யூ எல்லாருக்கும் சம்பளப் பட்டுவாடா செய்து கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் திடீரென்று எதிர்பாராத விதமாக மப்டியில் நுழைந்த ஒரு போலீஸ் பார்ட்டி மாத்யூவிடம் அடையாளங்களையும், ஆர்டரையும் காண்பித்து விட்டு அலுவலகத்தைச் சோதனை போட ஆரம்பித்தார்கள்.

சம்பளப் பணத்துக்காகப் பிரித்துத் திறந்து வைக்கப்பட்டிருந்த மாத்யூவின் கைப்பெட்டியில் இருந்து பச்சை நிற ஸ்டெர்லிங் நோட்டின் கட்டு ஒன்று சரிந்தது. வந்திருந்த போலீஸ் ரெய்டு பார்ட்டியின் முக்கிய இன்ஸ்பெக்டர் அதை கவனித்து விடவே, தலைவலி ஆரம்பமாயிற்று. பெட்டியை முழுவதும் குடைந்ததில், ஸ்டெர்லிங் டாலர் என்று மேலும் பல கத்தைகள் அகப்பட்டன. இன்ஸ்பெக்டர் விவரங்களை விசாரித்த போது “தங்கள் கஸ்டமர்களாகிய பிரயாணிகள் சிலருக்காகப் பாங்கிலிருந்து எடுத்த எக்ஸ்சேஞ்ஜ் தொகையே அது” என்று துணிந்து புளுகினான் மாத்யூ. இன்ஸ்பெக்டர் உடனே அதற்கான ‘டாகுமெண்ட்ஸ்; எங்கே என்று கேட்ட போது அவனால் சமாளிக்க முடியவில்லை. தடவினான். பூசி மெழுகினான். கடைசியாகக் கைதானான். அவன் கண் முன்பே ‘மாத்யூ டிராவல்ஸ்’ போலீஸாரால் பூட்டி ஸீல் வைக்கப்பட்டது.

தனது செயல்களுக்கும், தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை - அவர்கள் அப்பாவிகள் என்று மாத்யூவே கூறி விட்டான். என்றாலும், அகல்யா முதலியவர்களைச் சோதனையிட்டு அவர்கள் எதையும் வெளியே கொண்டு போகவில்லை என்று உறுதி செய்து கொண்டே போக அனுமதித்தனர் போலீஸார்.

அகல்யாவும் அங்கு உடன் வேலை பார்த்த ‘கிரேஸி’ என்னும் மற்றோர் ஆங்கிலோ இந்தியப் பெண்மணியும் வீடு செல்வதற்காக பீச் ஸ்டேஷனை நோக்கி மெளனமாக நடந்து கொண்டிருந்தார்கள். சேர்ந்து அருகருகே நடந்து போய்க் கொண்டிருந்தாலும் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.