பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/503

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : வசதியாக ஒரு வேலை

1125

முதலில் அகல்யாதான் ஆரம்பித்தாள். “கோடி ரூபாய் கிடைச்சாலும், இனிமே இது மாதிரி டிராவல் ஏஜென்ஸிலே வேலை பார்க்க மாட்டேன்.”

“பம்பாயிலே என் பிரதர் கம்பெனி ‘எக்ஸிகியூடிவ்’ ஆக இருக்கிறான். அவன் சிபாரிசிலே எங்கேயாவது ‘ஸ்டெனோ’ ஆகப் போயிடலாம்னு பார்க்கிறேன். இந்த ஊரே எனக்குப் பிடிக்கலே, ஐயாம் டயர்ட்டு ஆஃப் திஸ் ஜாப்” என்றாள் கிரேஸி.

“கிரேஸி! நான் எத்தனையோ தடவை இந்த மாத்யூவை வார்ன் பண்ணியிருக்கேன். ப்ரீஃப்கேஸிலே கத்தைகத்தையா ஃபாரின் கரென்ஸியைத் திணிச்சுட்டு அலையாதே... மாட்டிண்டுடுவேன்னு... அவன் கேட்டாத்தானே? இன்னிக்கு மாட்டிண்டாச்சு...”

“இதெல்லாம் ‘நத்திங்’ மாத்யூவுக்கு. இது கொசுக்கடி மாதிரித்தான்.எப்படியாவது சமாளிச்சுத் தப்பி வெளியே ரிலீஸ் ஆகித் தொழில் நடத்துவான் பாரு. டேக் இட் ஃப்ரம் மீ… அகல்யா…”

“அது ரொம்பக் கஷ்டம் கிரேஸி! இது ரொம்பப் பெரிய அஃபென்ஸ், அத்தனை சுலபமாக விட்டுட மாட்டாங்க…”

“எப்படியும் தொலையட்டும், நமக்கு இனிமே இந்த மாதிரி ‘ஜாப்’ வேண்டாம். ஸ்டிரெயிட் ஃபார்வாடா ஒரு ஜாப். அது வசதிகளே, இல்லாத வேலையானாலும் பரவாயில்லே, போதும்.”

“எல்லா வசதியான வேலையிலேயும், இப்படி வசதிக்குறைவான பல அபாயங்கள் இருக்கத்தான் இருக்கும்னு தோண்றது.”

“அப்படியானா அந்த வசதி நமக்குத் தேவையில்லே... ஒரு சாதாரண வேலை… நல்ல வேலை போதும்!” மாத்யூவின் மேல் ஏற்பட்ட வெறுப்பில் ஒரு தற்காலிக நெருக்கம் அவர்களிடையே உண்டாகியிருந்தது.

கிரேஸி ‘செயிண்ட் தாமஸ் மவுண்ட்'டில் வசித்தாள். அகல்யா மாம்பலத்தில் வசித்தாள். மின்சார ரயிலில் பயணம் செய்யும் போது இனி இந்த ஜன்மத்தில் இப்படிப்பட்ட வம்பான வேலைக்குப் போவது இல்லை என்ற உறுதியில்தான் இருவருமே பரஸ்பரம் பேசிக் கொண்டிருந்தனர்.

மாம்பலம் ஸ்டேஷனில் இறங்கும் போது கூட, “இன்னிக்குத் தேதி முப்பது: வாங்கின சம்பளம் இருக்கு, உடனே வேலை கிடைக்கலேன்னாலும், பத்துப் பதினைஞ்சு நாள் அலைஞ்சு தேடியாவது ஒரு கெளரவமான வேலையாகப் பார்க்கணும்” என்றாள் அகல்யா. இருவருமே கடுமையான வைராக்கிய மன நிலையில் இருந்தார்கள். மாத்யூ நடத்தி வந்த அந்நியச் செலாவணி மோசடி போன்ற தொழில்களில் வேலை பார்க்கவே அருவருப்பு அடைந்திருந்தார்கள் அவர்கள். ஏப்ரல் மாதம் கடைசி நாளான முப்பதாந்தேதி மின்சார ரயிலில் பரஸ்பரம் விடை பெற்றுக் கொண்டஅந்தத் தொழில் சிநேகிதிகள் மறுபடி சந்திக்க எத்தனை மாதங்கள் ஆகுமோ என்ற கவலையோடு பிரிந்தார்கள்.