பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/504

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1126

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

ஆனால், அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கே அதாவது மே முதல் தேதி உழைப்பாளிகள் தினத்தன்றே, அகல்யாவும் கிரேஸியும் சந்தித்துக் கொள்ள முடிந்தது.

சந்தித்த இடம் பிராட்வே. சந்திக்க நேர்ந்த அலுவலகம்”டிஸௌஸா டிராவல்ஸ்” ஒன்பதே முக்கால் மணிக்கு கிரேஸி அங்கே நுழைந்த போது, ‘டெலக்ஸ் டெஸ்க்' அருகே, “மோஸ்ட் இமீடியட் - செண்ட் ஹண்ட்ரட் செர்ரி ஃப்ரூட்ஸ்” - என்று சிங்கப்பூருக்கு ஒரு கேபிள் செய்தி அனுப்பிக் கொண்டிருந்தாள் அகல்யா. எதிர்பாராமல் அங்கே கிரேஸியைப் பார்த்ததும், ஒரு கணம் அகல்யாவுக்கும், அகல்யாவைப் பார்த்ததும் ஒரு கணம் கிரேஸிக்கும் முகத்தில் அசடு வழிந்தது. அடுத்த கணமே சமாளித்துக் கொண்டு,

“ராத்திரி டிஸௌஸா வீட்டுக்கு வந்திருந்தான்” என்ற ஒரு வாக்கியத்தையே ‘கோரஸ்’ மாதிரிப் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள். அப்போது டிஸெளஸா குறுக்கிட்டுச் சிரித்தபடியே இருவரையும் பார்த்துச் சொன்னான் :

“எங்கே பறந்தாலும், பறவைகள் பழையபடி பழகிய ,தெரிந்த கூடுகளுக்கே திரும்பி வந்தாக வேண்டும்.”

அகல்யா, கிரேஸி இருவருமே அவன் கூறியதை ஏற்பது போல் அவனை நோக்கிப் புன்முறுவல் பூத்தனர்.

(அமுதசுரபி, 1983)