பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/506

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1128

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

யிருப்பது என்றால் என்னவென்றே அவனுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் தெரியாது. அதை எல்லாம் தெரிந்து கொள்கிற அளவுக்கு அகர்வால் அவர்களை அனுமதித்ததே இல்லை.

கல்லுடைக்கிற அந்த மலைச் சரிவிலேயே புறம்போக்கு நிலத்தில் இலவசமாகக் குடிசைகள் போட்டுக் கொள்ள முடிந்திருந்தது. பக்கத்தில் இருந்த மிகப்பெரிய வனாந்தரம் அடுப்பெரிக்க விறகு சுள்ளிகள் பொறுக்கிக் கொள்ள வாய்ப்பளித்தது. காய்கறி, கீரைகள் பயிரிட்டுக் கொள்ள முடிந்தது.

இவர்கள் உடைத்துக் கொடுக்கும் கருங்கல் ஜல்லியைப் போபால், இந்தூர், குவாலியர் என்று லாரிகளில் ஏற்றி அனுப்பி, காண்ட்ராக்டர் அகர்வால் லட்சாதிபதியாகிக் கொண்டிருந்தான். .

நகரங்களில் காங்கீரிட் கட்டிடங்களும், பல அடுக்கு மாடிகளும், சிமெண்ட் நாகரிகமும் பெருகப் பெருக அகர்வாலின் லாபம் பெருகிக் கொண்டே இருந்தது. ஏறக்குறைய முதல் இல்லாமல் லாபம் சம்பாதிக்கும் வியாபாரமாக அகர்வால் அதை வளர்த்திருந்தான்.

தேர்தல் சமயத்தில் ஆளும் கட்சிக்குப் பத்து ஜீப்களும், சில லட்ச ரூபாய் நன்கொடையும் தந்து விட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குக் கவலையில்லாமல் பணம் பண்ணிக் கொள்ள முடியும் என்கிற இரகசியம் அகர்வாலுக்குத் தெரிந்திருந்தது.

அவனிடம் கல்லுடைத்துக் கொண்டிருந்த கொத்தடிமைகளோ, பிறரோ வெகுண்டு எழ முடியாத அளவு பலமும், செல்வாக்கும், ஆள் கட்டும் அகர்வாலுக்கு இருந்தன. அவனிடம் அடிமைப்பட்டுப் பழகியவர்களுக்குச் சுதந்திரமாயிருக்க முயல வேண்டும் என்கிற ஞாபகம் கூட வரமுடியாது.

இந்தச் சமயத்தில் அகர்வாலின் துரதிர்ஷ்டமோ அல்லது அடைக்கலம் குடும்பத்தாரின் அதிர்ஷ்டமோ, ஒரு சம்பவம் நேரிட்டது. தமிழ்நாட்டில் சினிமா செல்வாக்குள்ள ஓர் ஆட்சியின் பிடியில் மக்கள் இருந்த காலம் அது.

உருப்படியான பொருளாதாரத் திட்டங்கள் எதுவுமே இல்லாமல், திடீர் ஸ்டண்டுகள் மூலமே வெறும் கவர்ச்சியை நம்பிக் காலந்தள்ளி வந்த அந்தக் கட்சியின் எம்.பி. ஒருவர் போபாலுக்கு ஒரு விழாவுக்காக வந்தவர், மலைப் பகுதிகளையும் ஆதிவாசிகளையும் சுற்றிப் பார்க்கக் கிளம்பினார்.

அந்தச் சமயத்தில் அடைக்கலம் முதலியவர்களின் முதலாளியான அகர்வால் எங்கோ வெளியூர் போயிருந்தான். அடைக்கலம், அவன் மனைவி சூசையம்மாள், மகன் ஆரோக்கியம் மூவரும் கல்லுடைத்துக் கொண்டிருந்த பகுதியினருகே வந்ததும் முத்தரசு எம்பி, அவர்கள் தற்செயலாகத் தங்களுள் தமிழில்பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு ஆச்சரியப்பட்டு நின்றார்.