பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/507

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : கொத்தடிமைகள்

1129

கண்காணாத மத்தியப் பிரதேச வனாந்தரத்தில் தமிழ்க் குரல் ஒலிக்கக் கேட்ட வியப்புடன், “அடடே! நீங்கள்ளாம் நம்ம ஊருதானா? தமிழ்நாட்டுலே உங்களுக்கு எந்தப் பக்கம்?” என்று வினவினார் எம்.பி.

“சேலத்துப் பக்கம் ஐயா! இங்கே வந்து ரெண்டு மூணு வருசம் ஆவது…”

“இந்த வேலைக்கா இத்தினி தூரம் தேடி வந்தீங்க...? மூணு பேருக்குமா மாசம் என்ன கெடைக்கும்?”

“வந்தண்ணைக்கிலேருந்து மொத்தம்மா அம்பது ரூபா தர்ராங்க... அங்கே ஒண்ணும் கெடைக்காமப் பட்டினி கெடந்தோம். இங்கே இந்த அம்பதாவது கெடைக்குதேன்னு காலந்தள்ள வேண்டியிருக்குங்க…”

“மூணு பேருக்கும் தனித்தனியா அம்பது ரூபாய் தானே?”

“இல்லிங்க... மொத்தமே அம்பது ரூபாய்தான்!”

“எப்படிப் போதும்…?”

“போதுமோ போதாதோ, அவ்வளவுதாங்க. ஒண்ணும் பேச முடியாது…”

“உங்களுக்காகக் கொத்தடிமை ஒழிப்பு, இருபதம்சத் திட்டம் அது இதுன்னெல்லாம் வந்திருக்கே தெரியுமா?”

“அதெல்லாம் எங்களுக்கொண்ணும் தெரியாதுங்க… தெரிஞ்சாலும் பிரயோசனமில்லிங்க... பாஷை தெரியாத வேத்தூரிலே நாங்க எப்பிடி யாரை எதிர்த்துக்க முடியும்?”

“உங்க முதலாளி பேரு…”

அடைக்கலம் பதில் சொல்லத் தயங்கினான். அவன் முகத்தில் பீதியும் கலவரமும் படர்ந்தன.

“சும்மா சொல்லுப்பா என்னாலே உனக்கு ஒண்ணும் கெடுதல் வராது.”

மறுபடியும் தயக்கத்துக்குப் பின் அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டு தணிந்த குரலில்,”அகர்வால் ஐயா தாங்க” என்று அடைக்கலம் பதில் சொன்னான்.

முத்தரசு அங்கே எதுவும் குறித்துக் கொள்ளவில்லை என்றாலும், இடம், அடைக்கலம் குடும்பத்தினரின் பெயர்கள், அகர்வாலின் பெயர் எல்லாவற்றையும் தங்கியிருந்த இடத்துக்குத் திரும்பியதும், ஞாபகமாக டைரியில் குறித்துக் கொண்டார்.

அவருடைய அரசியல் மூளையில் ஒரு திட்டம் உதித்திருந்தது. சுயநலமில்லாத எந்தத் திட்டமும் சராசரி இந்திய அரசியல்வாதியின் சிந்தனையில் உதிப்பதில்லை.

மிக விரைவில் பார்லிமெண்ட் தேர்தல் வர இருந்தது. தன்னைப் பற்றித் தொகுதி மக்கள் போதுமான அளவு சலிப்பும், வெறுப்பும் அடைந்து விட்டார்கள் என்பது முத்தரசுக்குத் தெரிந்துதான் இருந்தது. அவர்கள் நம்பும்படியாக ஏதாவது புதிய