பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/508

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1130

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

ஸ்டண்ட் அடித்துத்தான் மீண்டும் வெற்றி பெற முடியும் என்பதும் முத்தரசுக்கே தெரிந்திருந்தது. மனத்திற்குள் இது பற்றி ஓர் இரகசியத் திட்டம் போட்டுக் கொண்டார் முத்தரசு.

பார்லிமெண்ட் கலைக்கப்பட்டுப் புதிய தேர்தல்கள் அறிவிக்கப்படுவதற்கு முன் திடீரென்று எல்லாத் தினசரிகளும், சுதந்திரம் பெற்று முப்பதாண்டுகளுக்கு மேலாகியும் நாட்டில் கொத்தடிமை முறை நீடிப்பதைக் கண்டு மனம் நொந்து முத்தரசு குமுறிப் பேசியிருந்த பேச்சைப் பிரசுரித்திருந்தன.

அதற்கு அடுத்த வாரமே வட மாநிலங்களில் தமிழர்கள் கொத்தடிமைகளாக இருப்பதைப் பற்றிய விவரங்களை ஆதாரங்களோடு முத்தரசு வெளியிட்டிருந்தார். தனது உயிரைத் தியாகம் செய்ய நேர்ந்தாலும், கவலைப்படாமல் துணிந்து சென்று கொத்தடிமைகளை மீட்டுத் தமிழகத்திற்கு அழைத்து வந்து உணவும், உதவியும் அளிக்கப் போவதாகச் சவால் விட்டிருந்தார் முத்தரசு. சுவரொட்டிகள், பானர்கள், விளம்பரங்கள் தடபுடல் பட்டன.

தேர்தல் அறிவிக்கப்பட்டு எல்லோரையும் போல் அவரும் வேட்பு மனு தாக்கல் செய்தார். மத்திய மாநிலங்களின் போலீஸ் உதவியுடன் ஒரு பிரஸ் போட்டோ கிராபரையும் உடனழைத்துக் கொண்டு போபால் சென்றார். அவர் சென்னையிலிருந்து கிளம்பிய வினாடி முதல் போட்டோ கிராபர் அணுஅணுவாகப் படம் பிடித்து வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொத்தடிமைகளை மீட்க முத்தரசு புறப்பட்ட செய்தி, கொத்தடிமை மீட்புப் பயணம் பற்றிய விவரங்கள், மீட்கப்பட்ட கொத்தடிமைகளோடு அவர் தமிழகம் திரும்பும் நாள் எல்லாம் படங்களோடு பத்திரிகைகளில் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்த முயற்சியைப் பற்றிய தகவல் எட்டி, அகர்வால் தலைமறைவாகி விட்டான்.

மத்தியப் பிரதேசக் காட்டில் இரண்டு மாநிலக் காவல் துறையினரின் உதவியோடும், மத்திய காவல்துறையினரின் பாதுகாப்போடும் முத்தரசு அடைக்கலம் குடும்பத்தினரை மீட்க முயன்ற போது,”ஐயா! எங்க மேலே நீங்க காட்டற அக்கறைக்கு ரொம்ப நன்றிங்க! ஆனா எங்களை இப்படியே விட்டுடுங்க. ஏதோ எங்களாலே முடிஞ்ச வரை காலந் தள்ளிட்டுப் போறோம். உங்களுக்குப் புண்ணியமாப் போவுது. எங்களை இட்டுக்கிட்டுப்போய் நாங்க இதுநாள் வரை இப்படி மோசமா இருந்தோம்னு விளம்பரப்படுத்தறது எங்களுக்கே பிடிக்கலே” என்று கெஞ்சிப் பார்த்தான் அடைக்கலம்.

முத்தரசு விடவில்லை.

“உன்னையும் உன் குடும்பத்தையும் இந்த நரகத்திலிருந்து மீட்காவிட்டால் நான் மனிதனே இல்லை. மாதம் அறுநூறு ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க முடிந்த உங்களை வெறும் அம்பது ரூபாய்க்கு அடிமைகளாக வச்சிருக்கிற அவலத்தை நினைச்சு நாடே வெட்கப்படுது.”