பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/509

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : கொத்தடிமைகள்

1131

எப்படியோ நயமாகவும், பயமாகவும் சொல்லி அடைக்கலம் குடும்பத்தினரை முத்தரசு தமிழகத்திற்கு அழைத்துச் செல்ல முடிந்தது.

“பல்லி விழாத பகல் உணவு - பாம்பு கடிக்காதபடி பரிவுடன் மருந்து - தேள் தீண்டாதபடி சிகிச்சை - பல்லைக் காக்க பற்பொடி என்று திட்டம் பல கண்ட செம்மலின் ஆட்சி கொத்தடிமைகளைக் காக்கவும் மீட்கவும் முன் நிற்கும். இது சத்தியம். சாசுவதம், எம் கவர்ச்சித் தலைவர் மீது ஆணை” என்று அழகிய வார்த்தைகளில் முழங்கினார் முத்தரசு.

அடைக்கலம் குடும்பத்தினருக்கு முத்தரசு அபயமளித்து வருவதைப் போல எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பத்திரிகைகளின் முதற்பக்கத்தை அலங்கரித்தன.

“முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்டது. இன்று இந்தியர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்கிறார் முத்தரசு...”

என்ற வாக்கியங்களுடன் முத்தரசு படத்தையும், காந்தியடிகள் படத்தையும் அச்சிட்டு வாக்காளர்களை வேண்டுவது போல் பத்திரிகை விளம்பரங்களும் சுவரொட்டிகளும் வெளியிட்டன. முத்தரசு காந்தியடிகளோடு ஒப்பிடப்பட்டார்.

தமிழகத் தலைநகரில் நடத்தப்பட்ட ஒரு மாபெரும் பொதுக் கூட்டத்தில் தான் மீட்டு வந்த கொத்தடிமைகளை அறிமுகப்படுத்தி, “என்னைப் போன்ற பொதுநலத் தொண்டன் இனி இப்படி அவலம் நடைபெற அனுமதிக்க முடியாது. இதற்காகவே என் வாழ்வை அர்ப்பணிக்கப் போகிறேன்” என்று முத்தரசு முழங்கிய போது ஆயிரக்கணக்கான மக்கள் கடலலை போல் கை தட்டி ஆரவாரித்தனர்.

அதே கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில், ‘கொத்தடிமை மீட்டகோமான்’ என்ற பட்டமும் முத்தரசுக்கு வழங்கப்பட்டது.

தேர்தல் முடிகிறவ ரை முத்தரசின் பங்களா அவுட் ஹவுஸில் அடைக்கலம் குடும்பத்தினரைத் தங்க வைத்து உபசரித்தார்கள். பிரச்சாரத்துக்கு அவர்கள் தேவைப்பட்டனர்.

தினசரி மாலை தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்குப் புறப்படும் போது முத்தரசின் காருக்குப் பின், மற்றொரு ஜீப்பில் அடைக்கலம் குடும்பத்தினரும் அழைத்துச் செல்லப்படுவதும், பிரச்சாரத்தின் நடுவே திடீரென்று ஒரு டிராமாவைப் போல் அவர்களை மேடை ஏற்றுவதும் வழக்கமாகி இருந்தது.

இந்தக் கொத்தடிமை மீட்பு விவகாரம் வாக்காளர்களிடையே ஒரு புதுக் கவர்ச்சியை உண்டாக்கியிருப்பது போல் தோன்றியது. முத்தரசுக்குப் பயங்கரமாகக் கூட்டம் கூடியது.

அடைக்கலம் எந்தப்பிரிவைச் சார்ந்திருந்தானோ, அந்தப் பிரிவு மக்கள் முத்தரசின் தொகுதியில் கணிசமாக இருந்தனர். அது ஒரு வசதியாகப் போயிற்று.