பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————————

இரண்டாம் தொகுதி/கார்த்திகைச் சொக்கப்பனை 🞸 673

நின்றது. இதோ சொக்கப்பனையைக் கொளுத்திவிடப் போகின்றார்கள். கூடியிருந்த மக்கள் நன்றாகப் பார்க்கவேண்டுமென்ற ஆவலில், ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளிக்கொண்டு முன்னால் வர முயன்றனர்.

‘அப்பப்பா! நெருப்பு எரிவதைப் பார்ப்பதில் இந்த மனிதர்களுக்கு ஏன்தான் இவ்வளவு ஆர்வமோ? எதுவும் தன்னை பாதிக்காத வரையில் மற்றவர்களுக்கு வேடிக்கையாகத்தான் தோன்றும் ஒரு வீடு பற்றி எரிந்தால் இப்படி வேடிக்கையாகப் பார்க்கத் தோன்றுமா?’

சொக்கப்பனையைக் கொளுத்துவதற்காகக் காயாம்பூ அம்பலக்காரன் அடக்க ஒடுக்கமாகப் பயபக்தியோடு பெருமாளின் பல்லக்குக்கு முன் வந்து நின்றான்.

தர்மகர்த்தாவும், உள்ளூர்ப் பெரியதனக்காரர்களும், பல்லக்கின் கீழே மிடுக்காக நின்றுகொண்டிருந்தனர். காயாம்பூ முறைப்படி அவர்களை வணங்கினான். அர்ச்சகர் அவன் கழுத்தில் மாலை போட்டுப் பரிவட்டம் கட்டினார். அவன் வணக்கத்தோடு அவற்றை ஏற்றுக்கொண்டு, பனைமரத்தில் ஏறுவதற்குத் தயாராக வேஷ்டியை வரிந்து கச்சை கட்டிக் கொண்டான். ஒரு வெண்கலத் தாம்பாளத்தில் அகல்விளக்கைப் பொருத்திவைத்து, மரியாதையாக அவன் கையில் கொடுத்தார் அர்ச்சகர்.

காயாம்பூ ஒரு கையில் விளக்கு வைத்த தாம்பாளத்தை ஏந்திக் கொண்டு சொக்கப்பனை மரத்தில் ஏறத் தயாரான போது, இரத்தினப் பத்தரும், இரண்டு போலீஸ் கான்ஸ்டேபிள்களும் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தனர். பத்தர் தர்மகர்த்தாவின் காதருகே வந்து ஏதோ கூறினார். தர்மகர்த்தா பத்தரிடம் பதிலுக்கு ஏதோ கேட்டார். உடனே இரத்தினப் பத்தர் தம் பையிலிருந்து ஏதோ ஒரு பொருளை எடுத்துத் தர்மகர்த்தாவிடம் காண்பித்தார். தர்மகர்த்தா அர்ச்சகரைப் பக்கத்தில் கூப்பிட்டு, அதைக் காட்டி என்னவோ அதட்டிக் கேட்டார். அர்ச்சகர் ‘திருதிரு’ என்று விழித்தார். “காலையில் களைந்து கொடுத்த மாலையோடு சேர்ந்து போயிருக்கிறது. நான் இதுவரை பெருமாள் திருமேனியில் இது இல்லாததைக் கவனிக்கவே இல்லை. இந்தப் பண்டாரப் பயல் அப்போதே என்னிடம் திருப்பிக் கொடுத்திருக்க வேண்டாமோ? இவன் மோசம் செய்திருக்கிறான்” என்று தர்மகர்த்தாவிடம் அர்ச்சகர் கதறினார். தர்மகர்த்தாவின் மீசை துடித்தது. கண்கள் சிவந்தன.

“அடேய் காயாம்பூ தடிப்பயலே விளக்கைக் கீழே வைத்துவிட்டு வா இங்கே!” என்று கூப்பாடு போட்டார். காயாம்பூ அம்பலக்காரன் விளக்கைத் தாம்பாளத்தோடு சொக்கப்பனைக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு, அரண்டுபோய் என்னவோ, ஏதோ என்று புரியாமல் தர்மகர்த்தாவுக்கு முன்னால் வந்து நின்றான். அவர் ஏன் அத்தனை பேருக்கு முன்னால் தன்னை அப்படி மரியாதையில்லாமல் கூப்பாடு போடுகிறார் என்பதே அவனுக்கு விளங்கவில்லை.

போலீஸ்காரர்களைப் பார்த்ததும் அவன் மனத்தில் என்னென்னவோ எண்ணங்கள் தோன்றின. தன் அருமை மகன் நாகலிங்கம் எங்காவது ‘திருவிளையாடல்’ புரிந்துவிட்டு, அகப்பட்டுக் கொண்டானோ? அதற்காக ஜாமீனுக்கு வந்திருக்கிறார்களோ என்றுதான் முதலில் அவன் நினைத்தான்.

நா.பா. 11 - 4