பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/510

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1132

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

‘வடக்கே கொத்தடிமையாய்ப் போன தமிழனை மீட்ட தனிப் பெருந்தலைவா வருக!’ என்று தொகுதி முழுவதும் முத்தரசை வரவேற்கும் சுவரொட்டிகள் முத்தரசின் செலவில் முத்தரசின் ஆட்களால் அடித்து ஒட்டப்பட்டன. விளம்பரம் வேண்டிய அளவு தாராளமாகச் செய்யப்பட்டது.

தேர்தல் முடிகிற வரை அடைக்கலம் குடும்பத்தினருக்கு ராஜோபசாரம் நடைபெற்றது. காலைச் சிற்றுண்டி, பகலுணவு, மாலைத் தேநீர், இரவு உணவு என்று வாழ்நாளில் கனவு கூடக் கண்டிராத சுகங்களை அந்தக் குடும்பத்தினர் அனுபவித்தனர். தேர்தல் முடிந்த பின்னும் கெளரவமான வேலை வாய்ப்புக் கிட்டும் என நம்பினர்.

தேர்தல் முடிந்தது. முத்தரசு பெருவாரியான வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடினார். அவரது கவர்ச்சிக் கட்சியும் வெற்றி பெற்றது. வெற்றி விழா அன்று அடைக்கலம் குடும்பத்தினரின் மேடைத் தோற்றம் முத்தரசுக்கு அவசியமாக இல்லை. இனி ஐந்து வருடம் கவலையில்லாமல் காலந்தள்ளலாம். முத்தரசு தன்னுடைய கவர்ச்சித் தலைவரை அழைத்து வெற்றி விழாவைக் கொண்டாடினார். வெள்ளம் போல் பெருங்கூட்டம் கொத்தடிமை ஒழிப்பைப் பற்றிப் பேச்சே இல்லை.

“இன்று நான் பெற்றிருக்கும் வெற்றி என் கவர்ச்சித் தலைவர் தந்தது. மக்கள் அவர் ஆணைக்குக் கட்டுப்பட்டு, என்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்” என்று முத்தரசு அதே மேடையில் பேசியதைக் கூட்டத்தின் ஒரு மூலையிலிருந்து அடைக்கலமே தன் செவிகளால் கேட்டான்.

கூட்டம் முடிந்ததும் கவர்ச்சித் தலைவர் குடித்து விட்டு மீதம் வைத்த சோடாவைக் கெஞ்சிக் கேட்டுக் குடிப்பதற்குப் போட்டி போட்டு முண்டியடித்து நெருங்கிய பெண்கள் கும்பலைப் பார்த்து விட்டு வியந்த சூசையம்மாள் அதைத் தன் கணவன் அடைக்கலத்திடம் வந்து சொன்னாள். அடைக்கலம் பதிலுக்கு அவளை நோக்கிக் கேட்டான். - .

“நாமதான் ரொம்பக் கேவலமான கொத்தடிமைகளா இருந்தோம்னாங்க. இங்கே வந்து பார்த்தா, எச்சில் சோடாவுக்குப் பறக்கற இந்த அப்பாவி ஜனங்க அதை விடப் பெரிய கொத்தடிமைங்களாவில்ல இருப்பாங்க போலிருக்கு!”

அந்த வெற்றி விழா நடந்த மூன்றாம் நாள் மொத்தமாக நூறு ரூபாய் பணத்தைக் கையில் கொடுத்து, “நீங்க போகலாம். உங்க உதவிக்கு ரொம்ப நன்றி” என்று அடைக்கலத்தையும், அவன் குடும்பத்தையும் அவுட்ஹவுஸிலிருந்து வெளியேற்றினார் முத்தரசு

“வேலை எதினாச்சும் பார்த்துக் குடுங்க.”

“அரசு ஆவன செய்யும்! கவலைப்படாதே!”

இதற்குப் பின் அவனால் முத்தரசைப் பார்க்கவே முடியவில்லை.