பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/511

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : கொத்தடிமைகள்

1133

அடைக்கலம் மேலும் மூன்று மாதம் தமிழ்நாட்டில் தங்கி உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி தெருக்களில் குடும்பத்தோடு நாயாக அலைந்தான். எந்த வழியும் புலப்படவில்லை. யாரும் ஆதரிக்க முன் வரவில்லை. முத்தரசும் அவனது கவர்ச்சித் தலைவரும் பல் தேய்க்கப் பல்பொடியும், பாம்புக் கடிக்கு மருந்தும் கொடுத்தார்களே ஒழிய, வேலையற்றோருக்கு வேலை கொடுக்க எதுவும் செய்யவில்லை. கொடுப்பதாகப் பிரச்சாரம் மட்டுமே நடந்தது.

‘இனியும் தொடர்ந்து இங்கேயே இருந்தால் செத்தே போவோம்’ என்ற நிலைமை ஆகி விட்டது. அடைக்கலமும், அவன் குடும்பத்தினரும் ரயிலில் வித்தவுட் ஆக போபால் திரும்பினர்.

மறுபடியும் அகர்வாலிடம் போய் அவன் காலைக் கையைப் பிடித்துக் கெஞ்சிய போது முதலில் அடி உதை அவமானம் எல்லாம்தான் கிடைத்தன. கடைசியில் போனால் போகிறதென்று மறுபடி கல்லுடைக்கிற வேலையை அவர்களுக்குக் கொடுத்தான் அவன். ஆனால், ஒரு தண்டனையாக இருக்கட்டுமென்று அவர்கள் மூவரும் அடங்கிய குடும்பத்தின் மாதச் சம்பளத்தை ஐம்பதிலிருந்து நாற்பது ரூபாயாகக் குறைத்து விட்டான் அகர்வால்.

ஆனாலும் என்ன? குடியிருக்க இடம் கிடைத்தது. அடுப்பெரிக்க விறகு கிடைத்தது. குடிசையைச் சுற்றிக் காய்கறி, கீரை பயிரிடத் தடையில்லை. அடைக்கலம் குடும்பத்தினர் மறுபடி சுதந்திரமாக வாழ வழி பிறந்தது. அவர்களைப் பொறுத்தவரை முத்தரசோடு கழித்த சில நாட்களில் மட்டுமே தாங்கள் கொத்தடிமைகளாக இருந்திருப்பதாய் உணர்ந்தனர்.

(1984-க்கு முன்)