பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/513

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : ஒருமைப்பாட்டைக்காக்க ஒரு மாநாடு

1135

தொடக்கத்தில் பாட ஏற்பாடாகியிருந்தது. ‘சர்வே ஜனோ சுகினோ பவந்து’ எல்லா மக்களும் நன்றாயிருக்கட்டும் - என்பது மகாநாட்டின் முத்திரை வாக்கியமாக மோட்டோவாக இருந்தது. உணவில் கூட ஒருமைப்பாட்டு ஏற்பாடு இருந்தது. ஒரு நாள் தமிழ்நாட்டுக் காலைச் சிற்றுண்டியாக இட்லி, இடியாப்பம், மறுநாள் பகலுணவுக்குக் கன்னட வகை, அன்று இரவு உணவுக்குப் பஞ்சாபி ஏற்பாடு. அடுத்த நாள் காஷ்மீரி கபாப்-புலவு என்றெல்லாம் ஒழுங்கு செய்திருந்தார்கள். மகாநாட்டுக் கூடத்தில் எல்லாப் பிரதேசத்துக் கலைஞர்கள், கவிஞர்களின் படங்களையும் கலந்து வைத்திருந்தார்கள். ஆனாலும் என்ன? பிரதிநிதிகள் தங்கும் போதே தகராறு ஆரம்பமாகி விட்டது. சர்ச்சை கிளம்பி விட்டது.

“எங்களுக்குக் காவிரி நீரைப் போதுமான அளவு தர மறுக்கும் கன்னடப் பிரதேசப் பிரதிநிதியோடு ஓர் அறையில் நான் இணைந்து தங்குவதென்பது நடவாத காரியம். எனக்குத் தனி அறை வேண்டும்” என்றார் தமிழ்நாட்டுப் பிரதிநிதி கணியூர் மணிமாறன்.

சரி, தொலையட்டும்; மராத்தியப் பிரதிநிதியையும் கன்னடப் பிரதிநிதியையும் சேர்த்துத் தங்க வைக்கலாம் என முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

‘கர்நாடக - மகாராஷ்டிர எல்லைப் பிரச்னை தீாந்து ‘பெல்காம்’ யாருக்கு என்பது முடிவானால் ஒழிய நான் மராத்தியரோடு தங்குவது முடியாத செயல்’ எனச் சவால் விட்டு ஒதுங்கி விட்டார் கன்னடப் பிரதிநிதி புல்லூர் புட்டப்பா.

பஞ்சாப்-ஹரியானா பிரதிநிதிகள் ஒருவரோடொருவர் சேர்ந்து தங்கவே பயந்து நடுங்கினார்கள், ஒதுங்கினார்கள்.

காஷ்மீர்-இமாசலப் பிரதேசப் பிரதிநிதிகளும் அவ்வாறே விலகினார்கள். கடைசியில் ஒவ்வொரு பிரதிநிதியையும் தனித்தனியாகவே தங்க வைப்பது என்று முடிவாயிற்று. முதல் முயற்சியே இப்படி ஆகி விட்டது. அடுத்து ஒவ்வொன்றிலும் கூட இப்படியே ஆயிற்று.

மூன்று நாள் மகாநாட்டின் முதல் நாள் தொடக்கத்தின் போதே தாகூரின் பாட்டைப் பாடியதும், தமிழ்ப் பிரதிநிதி அதைக் கடுமையாக எதிர்த்தார்.

“இந்தித் திணிப்பை இந்தப் பாட்டு உறுதிப்படுத்துகிறது. இதைத் தமிழகம் ஒரு போதும் ஏற்காது-ஏற்க முடியாது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதையே இம்மாநாட்டின் தொடக்கப் பாடலாக ஏற்க வேண்டுகிறேன்” என்று தமிழில் அவர் முழங்கியதை யாரும் சீரியஸ்ஸாக எடுத்துக் கொள்ளவில்லை. மலையாளப் பிரதிநிதிக்கு மட்டுமே அது இலேசாகப் புரிந்தது. அவர் உடனே தமிழ்ப் பிரதிநிதியிடம் “இப்போது பாடிய பாட்டு இந்தி இல்லை! வங்காளி” என்றார். இந்திக்கும் வங்காளிக்கும் கூட வித்தியாசம் புரியாதவராகத் தமிழ்ப் பிரதிநிதி இருப்பது அவருக்கு அதிர்ச்சியளித்தது.”சரி அதுதான் தொலையட்டும். ‘சர்வே ஜனோ சுகினோ பவந்து’ என்று மகாநாட்டின் கொள்கை வாக்கியத்தை இந்தியில் எழுதியிருக்கிறார்களே அதற்கு என்ன சொல்கிறீர்கள்” என்று சீறினார் கணியூர் மணிமாறன் .