பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/514

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1136

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“அது இந்தியில்லை, சமஸ்கிருதம் மிஸ்டர் மணியூர் கணிமாறன்!”

“தவறு! கணியூர் மணிமாறன் என்று சொல்ல வேண்டும்” என்று தம் பெயரைச் சரியாகச் சொல்லும்படி மலையாளப் பிரதிநிதியைத் திருத்தினார் மணிமாறன், மகாநாட்டை ஆங்கிலத்தில் நடத்துவதா, இந்தியில் நடத்துவதா என்ற சர்ச்சை எழுந்த போது வட இந்திய மாநிலங்கள் ஒரே குரலில் ஆங்கிலம் கூடாது என்று முரண்டு பிடித்தன. இந்தி கூடவே கூடாது என்றன தென்னிந்திய மாநிலங்கள். உடனே போர் மூண்டது.

“மாநாட்டை இந்தியில் நடத்தினால், அதை எதிர்த்து இன்றே இங்கேயே இப்போதே தீக்குளிக்கவும் தயங்க மாட்டேன்” என்றார் தமிழ்ப் பிரதிநிதி. இந்தியிலும் கூடாது, ஆங்கிலத்திலும் கூடாது என்றால் எப்படித்தான் மகாநாட்டை நடத்துவது என்று திணறிய பின், “எல்லா மொழிப் பிரதேசங்களையும் சமமாக நடத்துவதுதான் இந்த மகாநாட்டின் நோக்கம். ஆகவே, அவரவர்கள் தாய் மொழியில் அவரவர்கள் விரும்பியபடி பேசலாம்” என்று ஒருவர் கூறிய யோசனை ஏற்கப்பட்டது. அதன்படி தலைவர் நரசிம்ம கர்லேகர் மராத்தியில் பேசினார். காரியதரிசி ஹரி கேசவலால் இந்தியில் பேசினார். கணியூர் மணிமாறன் “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்தது தமிழ்! அது உலக மொழி. அதற்கு இணையான மொழிகளே இல்லை. காதலையும், வீரத்தையும் போற்றியது தமிழ். அதை எதிர்ப்போர் ததூசுதூசாகப் போய்விடுவது திண்ணம்” என்று தமிழில் முழங்கினார்.

“வெகுமானப்பட்ட அத்யட்சகருக்கும், சோதரன்மாருக்கும் என்ட நமஸ்காரம்” என்று மலையாளத்தில் ஆரம்பித்ததார் கேரளப் பிரதிநிதி.

“ஒரு ஹரியானாக்காரரை பொதுக் காரியதரிசியாக நியமித்ததன் மூலம் பஞ்சாபியர்களை இம்மாநாடு அவமதித்து விட்டது” என்று சீறிப் பாய்ந்தார் பஞ்சாப் பிரதிநிதி.

“ஒரு மராத்தியரைத் தலைவராகக் கொண்ட இக்குழுவிலிருந்து கன்னடியர்களுக்கு நியாயம் எதுவும் பிறக்க முடியாது” என்பதைக் கன்னடப் பிரதிநிதி முழங்கினார்.

மொழி பெயர்ப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் ஒருவர் பேசியது முழுமையாக மற்றவருக்குப் புரியவில்லை.

பஞ்சாப் நதிகளின் நீரைப் பங்கிடும் விஷயத்தில் ஹரியானா மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுவதாக ஹரியானாப் பிரதிநிதி குறைப்பட்டுக் கொண்டார்.

காஷ்மீரைப் பாரதத்தின் மற்ற மாநிலத்தினர் சந்தேகக் கண்களோடு பார்ப்பதைக் கைவிடவேண்டும் என்று கடுமையாகச் சொன்னார் காஷ்மீரப் பிரதிநிதி.

தகராறுக்கிடம் இல்லாமல் உணவு மேஜையருகே கூடும் போதுதான் எல்லா மாநிலப்பிரதிநிதிகளும் ஒத்துப்போனார்கள். எந்த விமர்சனமும் எழவில்லை.பஞ்சாப்