பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/518

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1140

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

சுவாமிநாதன் எதையாவது கண்டித்தால் எதிர்த்துப் பதில் சொல்லியோ அல்லது தான் செய்ததுதான் சரி என்று விளக்க முயன்றோ, நேரத்தையும், விவாதத்தையும் வளர்க்காமல் மெளனமாகப் புன்முறுவலோடு சமாளித்தான் மணி. இந்த வயதில் இப்படி ஓர் இங்கிதமும், குறிப்பறிதலும் உள்ளவனைப் பார்க்கவே முடியாதென்று வியப்பாயிருந்தது அவருக்கு.

சோம்பல் மருந்துக்குக் கூட அவனிடம் இல்லை. காலையில் ஐந்து மணிக்கு எழுந்தான். இரவு பதினொரு மணி வரை உழைத்தான். அவனிடம் என்ன குறை கண்டுபிடிப்பதென்று தெரியாமல் தவித்தார் அவர்.

இன்ஸ்டிடியூட் வளாகத்திலேயே ஒரு கோடியில் டைரக்டருக்கு வீடு கொடுத்திருந்தார்கள். எல்லா மாணவர்களையும் போல் ஃபுல் டைம் ரிஸர்ச்சராகப் பதிவு செய்து கொண்டு வந்திருந்த மணி ஹாஸ்டலில் தங்குவதாகத்தான் இருந்தான். அவனுடைய அதிர்ஷ்டம் இன்ஸ்டிடியூட்டின் இயக்குநர் டாக்டர் சுவாமிநாதன் வீட்டில் எல்லோருக்கும் அவனைப் பிடித்துப் போயிற்று. சுவாமிநாதனே தயங்கியும் கேட்காமல், திருமதி. சுவாமிநாதனும் மற்றவர்களும் அவனை அந்த வீட்டிலேயே இருக்கும்படி அனுமதித்து விட்டார்கள்.

‘”ஸர்ச் ஸ்காலராக வந்திருப்பவனை ஹாஸ்டலில் தங்க விடுவதுதான் முறை. எவ்வளவுதான் அனுசரணையாக இருந்தாலும், வீட்டில் வைத்துக் கொள்வது சரிப்பட்டு வராது” என்றார் அவர்.

“உங்களை மாதிரி ஒரு ஆஃப்ஸ்ண்ட் மைண்ட்டட் புரொஃபஸரைக் கட்டிண்டு நான் படற கஷ்டத்தை அவனாவது கொஞ்சம் புரிஞ்சிண்டிருக்கான். அவன் ஒரு நிமிஷம் இல்லேன்னா இந்த வீடு நாறிப் போயிடும்” என்றாள் திருமதி சுவாமிநாதன். அவரால் மறுத்துச் சொல்ல முடியவில்லை.”ரேஷன் கார்டு தொலைஞ்சு போய், நாலு வாரமாகச் சர்க்கரை, ரவை, பாமாயில் இல்லாமத் திண்டாடினேன். ஊரெல்லாம் தெரிஞ்சவா இருந்தும் உங்களாலே மறுபடி கார்டு வாங்கித் தர முடியலே. மணி போனான், என்ன செஞ்சானோ, யாரைப் பார்த்தானோ நிமிஷமாப் புதுக் கார்டு வாங்கிண்டு வந்துட்டான். மிக்ஸி ரிப்பேராயி மூலையிலே கிடந்தது. அவனே ஸ்கூரு டிரைவரைக் கையிலே எடுத்துண்டு உட்கார்ந்தான். அரைமணி நேரத்திலே சரிப்படுத்தி ஓட வச்சுட்டான்.”

என்று அவள் மணியின் பிரதாபங்களை மேலும் அடுக்கிய போது அவரால்

எதிர்த்துப் பேச முடியாமல் போயிற்று. அவருடைய மனைவி மட்டுமின்றிப் பெண்களும் மணியைக் கொண்டாடினார்கள். தினசரி காலையில் இன்ஸ்டிடியூட்டைப்பெருக்கிச் சுத்தம் செய்ய வரும் பதினாலு வயதுப் படிப்பறிவற்ற குப்பாயி முதல் சந்திரஹாசன் ஐ.ஏ.எஸ்.ஸின் மகள் நந்தினி வரை அனைவருமே மணியிடம் கலகலவென்று சிரித்துப் பேசிக் கொண்டு நின்றார்கள். நெருங்கிப் பழகினார்கள். அவனைக் கொண்டாடினார்கள்.

சந்திரஹாசன் ஐ.ஏ.எஸ்.ஸின் மகள் இங்கிலிஷ் லிட்டரேச்சர் எம்.ஏ. முதல் வகுப்பில் தேறியவள். இன்ஸ்டிடியூட்டில் ‘இப்ஸனையும் பாஸனையும்’ ஒப்பிட்டு