பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/519

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : குணம் நாடிக் குற்றமும் நாடி

1141

ஆராய்ச்சி செய்கிறாள். கல்யாண வயது. நல்ல அழகி. அவளிடமிருந்து தினசரி மணியைக் கேட்டு ஏழெட்டு முறையாவது டெலிபோன் வருகிறது. நேரில் வந்து விட்டாலோ, இன்ஸ்டிடியூட் வாயிற்படியில் புத்தகங்களை மார்போடு அணைத்தபடி, மணியை எதிரே நிறுத்தி வைத்துக் கொண்டு மணிக்கணக்கில் அரட்டையடிக்கிறாள். எதிரே தான் இரண்டு நிமிஷம் நிற்கச் சொல்லி ஏதாவது கேட்டால், கூச்சமும் பயமுமாக நடுங்குகிற அதே நந்தினிதான் மணிப்பயலோடு நேரம் போவது தெரியாமல் சிரித்துப் பேசுகிறாள் என்பதை அவரால் நம்பக் கூட முடியவில்லை. பத்து நிமிஷம் ஏதிரே உட்கார்த்தி வைத்துப் பேசிக் கொண்டிருந்தாலே மனம் உல்லாசமும், கிளுகிளுப்பும் அடையும். அவ்வளவு வசீகரமான பெண் நந்தினி. எதையாவது ஒரு சாக்காக வைத்துத் தானே அவளை அழைத்து ரிஸர்ச் ப்ராக்ரஸ் பற்றி எல்லாம் விசாரிப்பது போல் பாசாங்கு செய்திருக்கிறார் அவர். அம்மாதிரி வேளைகளில் ஒரு முறை கூட அவளிடம் சிரிப்பையோ, புன்முறுவலையோ- உல்லாசத்தையோ அவர் பார்க்க முடிந்ததில்லை. ‘மோஸ்ட் ஒபீடியண்ட் ஸ்டூடண்ட்’ என்பது போல் பயபக்தியோடு கேட்ட கேள்விக்கு அளவாகப் பட்டும், படாமலும் பதில் சொல்லி விட்டுப் போய் விடுவாள். கொஞ்சம் சிரித்தால் கூட முத்து உதிர்ந்து விடுமோ என்று பயந்து அதிஜாக்கிரதையாய்ப் பழகுவது போலிருக்கும்.

இதெல்லாம் போதாதென்று இன்ஸ்டிடியூட்டிற்கு வருகிற தபால்களில், எண்ணிக்கையில் முக்கால்வாசி மணியின் பெயருக்குத்தான் இருந்தன. புதுக்கவிதைகள் எழுதுகிறானாம். தபாலில் அவன் பெயருக்கு வந்திருந்த ‘முத்திரை’ என்கிற ஒரு புதுக்கவிதைப் பத்திரிகையைப் பிரித்து அதில் அவன் எழுதியிருந்த புதுக்கவிதை வரிகளைக் கண்டவுடன் டாக்டர் சுவாமிநாதனுக்கு எரிச்சல் பொத்துக் கொண்டு வந்தது. கவிதையின் தலைப்பு ‘ரோஜா தோட்டத்தில் ஒரு குழப்பம்’ என்பது.

“ஆஜாதுபாகுவாய் நின்றுன்னை
அடிமுதல் முடிவரை பார்த்து மயங்குகின்றேன் அடியே
ரோஜா தோட்டத்தில் பூப்பறிப்பாய்
ரோஜாவும் உன் கைமலரும் இணைகையிலே
ரோஜா எது கைஎது எனத் தெரியாமல்
ஆஜாதுபாகுவாய் நின்றுன்னை
அடிமுதல் முடிவரை பார்த்துக் குழம்புகின்றேன்
அழகுக் குழப்பம் ஆமாம் இது அழகுக் குழப்பம்.”

படித்ததும் தப்புக்கள்தான் முதலில் அவருக்குத் தெரிந்தன. பாடுகிறவன் தன்னைத்தானே ‘ஆஜாதுபாகு’ என்று பெருமையாக வர்ணித்துக் கொள்வது சரியில்லை என்றும் மரபுக்கு ஒத்து வராது என்றும் தோன்றியது. மரபை இலட்சியம் செய்யாமல் பாடப்படுவதுதானே புதுக் கவிதை என்றும் கூடவே எண்ண முடிந்தது. கவிதை ஆஜாதுபாகுவாயிருந்ததோ இல்லையோ, மணி ஆஜாதுபாகுவாயிருந்தான். இப்படி இலக்கணப் பிழைகளோடு கூடிய கவிதையை எழுதியதற்காக அந்த இன்ஸ்டிடியூட்டின் மாணவன் என்ற முறையில் அவனுக்கு ஏன் ஒரு மெமோ கொடுக்கக் கூடாதென்று எண்ணி மெமோவை எழுதக் கடிதத் தாளை எடுத்தார்.