பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/520

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1142

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

இன்ஸ்டிடியூட் கடிதத் தாளில் நிறுவனத்தின் முத்திரா வாக்கியமாக அச்சிடப்பட்டிருந்த ‘குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்’ என்ற குறள் கண்ணில் பட்டுத் தொலைத்தது. ஆராய்ச்சியின் இலக்கணமே அந்தக் குறள்தான் என்று இந்த இன்ஸ்டிடியூட்டின் ஸ்தாபகர்கள் அதைக் கொள்கை வாக்கியமாக அமைத்திருந்தார்கள். திடீரென்று மனசு மாறியது. கை மெமோ எழுதுவதற்குத் தயங்கியது.அழகிய சிவந்த கைகளை ரோஜாப் பூக்களோ எனக் குழப்பம் அடைந்தது பற்றிய சிந்தனை மின்னலில் கவிதை வீச்சு இருப்பதை மன்னிக்கலாமென்று தோன்றியது. குணமும் நாடிக் குற்றமும் நாடினால், கவிதையில் குணம்தான் ஒரு மாற்று அதிகமாயிருக்கும் போல் தோன்றியது. சிரிப்பும், மலர்ச்சியும் நிறைந்த மணியின் முகம் நினைவுக்கு வந்து, அவரை மெமோ எழுதுவதிலிருந்து தடுத்து விட்டது. அவனுக்கு ஒரு மெமோ கொடுத்தால், வீட்டில் அவருடைய மனைவியே அதற்காக அவரைக் கோபித்துக் கொள்ளலாம். அவர் மனத்தில் வெறுப்பு ஒரு பக்கமும், அனுதாபம் ஒரு பக்கமுமாக மணியைப் பற்றி அபிப்பிராயம் மாறி, மாறி அலை மோதியது. கடைசியில் போனால்-போகிறதென்று மரபு வழியில் தீவிரப் பற்றுள்ள அவர் அவனுடைய புதுக் கவிதையை மன்னித்துத் தொலைக்க வேண்டியிருந்தது.

ஆனாலும் அவர் மன்னித்தாலும், அந்தப் பாவி தன்னுடைய அதிகப்பிரசங்கித் தனத்தால் தானே வேறு ஒரு வம்பில் மாட்டிக் கொண்டு விட்டான்.

“பிரியமுள்ள நந்தினி! நீ சென்ற மாதம் நம்முடைய இன்ஸ்டிடியூட் தோட்டத்தில் ரோஜாப்பூப் பறித்தபோது என்மனத்தில் தோன்றிய கற்பனையைக் கவிதையாக எழுதி ‘முத்திரை’ இதழுக்கு அனுப்பினேன். பிரசுரமாகியிருக்கிறது. இத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன். உன்னுடைய ரோஜாக் கைகளினால் பிரித்துப் படிக்கவும்” என்று எழுதிக் கையெழுத்துப் போட்டு நந்தினியின் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறான் மணி. அந்தத் தபாலை நந்தினியின் தந்தை சந்திரஹாசன் ஐ.ஏ.எஸ். வாங்கிப் பிரித்துப் படித்து விட்டார். அவருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அதே சமயம் தமிழ் சரியாகத் தெரியாததால், அதிகம் விளங்கவும் இல்லை. -

“டியர் டாக்டர் சுவாமிநாதன்…ப்ளீஸ் லுக் இன்டு த மேட்டர் பெர்ஸனலி அண்ட் டேக்நெஸஸ்ஸரி ஆக்ஷன்…” என்பது போல் ஐ.ஏ.எஸ். பாணியில் ஒரு நோட்டு எழுதி, அந்தக் கடிதத்தையும், கவிதையையும் சுவாமிநாதனுக்கே அனுப்பி வைத்தார் சந்திரஹாசன். சுவாமிநாதன் அவருக்கு மிகவும் வேண்டியவர், நண்பர். அதனால் ஏதாவது தப்பாக இருந்தால், அவரே பார்த்துச் சம்பந்தப்பட்டவன் மேல் உரிய நடவடிக்கை எடுக்கட்டும் என்ற கருத்தில் கடிதம், கவிதை, நோட் மூன்றையும் அவருக்கு ஓர் உறையில் இட்டு, ‘கான்பிடன்ஷியல்’ என்று எழுதி அனுப்பியிருந்தார் நந்தினியின் தந்தை. சுவாமிநாதனுக்கு இந்தத் தகவல் தெரிந்ததும், முதலில் எரிச்சலாகத்தான் இருந்தது. வகையாக மாட்டிக் கொண்டு விட்டான். இந்த அதிகப்பிரசங்கி மணிக்கு ஒரு பாடம் கற்பித்துத்தான் ஆக வேண்டும் என்று ஆத்திரம் அடைந்திருந்தார் அவர். பெண்களிடம் பல்லிளித்துக் கொண்டு நிற்கும் அவனுக்கு இனி மேலாவது புத்தி வரட்டும் என்று எண்ணியது சுவாமிநாதனின் உள்ளம். ஆனால், அதில் ஒரு சிறிய சந்தேகமும் உள்ளூற இருந்தது. பெண்களிடம் அவன் பல்லை